44
________________
44 கோயில் நிருவாகத்தைப் பிராமண அறங்காவலர்களிடம் ஒப்புவித்து, பிராமணீய ஆதிக்கம் வளரவும், இதர சாதியினர் உரிமை இழக்கவும் ஏற்பாடு செய்தனர். சில சட்டங்கள், நிருவாக ஆணைகள் மூலம் முசுலீம், கிறித்தவர் முதலானோர் யாவரையும் இந்துச் சட்டத்திற்கு உடன்பட்டவர்களாகச் செய்தனர். சாதிப் பிரிவுக்கு ஆங்கிலேயர், அரசு அங்கீகாரம் கொடுத்தனர். நாட்டு மக்களின் மதத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு, சாதி வேற்றுமையால் வருகிற பிரச்சினைகளிலே அந்தந்த வருண சாதிக்கு வைதிக முறையில், என்னென்ன வகையில் (வெவ்வேறு) நியாயம் அதனை அப்படியே வழங்கியுள்ளார்களோ ஏற்றுக்கொண்டார்கள். ஒரு குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் முறைகேட்டுக்கு ஆங்கிலேய அரசு பாதுகாப்பு கொடுத்தது. சாதிவழி நிலைநாட்டப்பட்ட இழிநிலையை மாற்றி அமைக்க முற்பட்ட சமூகச் சீர்த்திருத்தவாதிகளின் நம்பிக்கையை ஆங்கிலேயர் நாசமாக்கினார்கள். வெள்ளைக்காரன் ஆட்சி இருக்கிறது என்பதால், சீர்திருத்தம் செய்யலாம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு கிடைக்கும்; பெண்களுக்கு வாழும் உரிமை கிடைக்கும் என்று நம்பிப் போராடியவர்கள், நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. ராசாராம் மோகன்ராய் இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க, வைதிகத்தை எதிர்த்து ஒரு சட்டம் கொண்டுவர நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. மத விடயங்களில் தலையிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு சாதிவழி அடிப்படைக் கொள்கைகள் வளரவும், நாட்டில் நிரந்தரமாகத் தொடரவும் இடம் அளித்தனர்.