உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சிறுகதைகள்



“நமக்கென்னாங்க... தினை விதைச்சவங்க... தினை அறுப்பாங்க...உம்... உலகம் பெரளப் போகிறது போங்க” என்று ஆயாசமாகக் கூறியபடி சாவிக்கொத்தை எடுத்து விரலில் சுழற்றிக்கொண்டே நகர ஆரம்பித்தார் நாயுடுகாரு. ஆபீஸ் லைட்டையும் அணைத்துவிட்டு டாக்டர் பிச்சுமூர்த்தி வெளியே வந்தார்.

இருவரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில், வாயிற்பக்கத்து விளக்கின் ஒளிமட்டும் மங்கலாகத் தெரிந்தது. ஆஸ்பத்திரியின் வாசற்படியண்டை ஒரு உருவம் ஆடியசைந்து வந்துகொண்டிருந்தது. “ஆ... அய்யோ....அப்பா... சாமி..” அது இன்னும் கொஞ்சம் வேகமாகவந்து ஆஸ்பத்திரியின் படியில் ஏறிற்று.

டாக்டர் கையிலிருந்த ‘டார்ச்’ விளக்கை அடித்தார். முப்பது வயதுக்குட்பட்ட ஒரு பெண். கிழிந்துபோன ஒரு சிவப்புச் சேலை. வறண்டு, காற்றில் பறந்து கொண்டிருக்கும் அலங்கோலமான கூந்தல். வெளிச்சத்தில் கண்களை மூடிக்கொண்டாள். பூரண கர்ப்பவதி. பிரசவ வேதனையில் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதைத் துடித்துக்கொண்டிருந்த அவளது கை கால்கள் காட்டின. நிற்க முடியவில்லை. வாயிற் கதவின் முகப்பைப் பிடித்துக்கொண்டு குனிந்து கொண்டாள். “அய்யோ... கடவுளே... சாமி! என்னைக் காப்பாத்துங்கோ... கோடி புண்யமுண்டு.”

அவள் பேசவில்லை; கதறினாள்.

“ஏதடா சனியன்” டாக்டர் முணுமுணுத்துக் கொண்டார்.

“உன் ஆம்படையான் எங்கே? ஒருத்தருமில்லாமல் வந்து ஒபத்திரவம் பண்றே?...” கம்பவுண்டர் அலுத்துக்கொண்டே தெரு விளக்கையும் அணைத்தார்.