உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு. கலைஞர்

13


பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. மறுபடியும் வர்ணனையைக் கவனிப்போம். குத்து விளக்கின் ஒளியில் கட்டில் ஒன்று தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா? அதன் மீது மெத்தென்ற மஞ்சம்! மல்லிகை, முல்லை, ரோஜா மலர்கள் தூவப்பட்ட மஞ்சம். விளக்கு, கட்டில் மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் பால் நிலவு இல்லையேல் வானத்திற்கு அழகேது? அந்தப் பால் நிலவாக ஒரு மங்கை அந்தப் படுக்கையில் இருக்கிறாள். அவள் கொத்தலர் பூங்குழல் கொண்ட கோதை. பெயரோ நப்பின்னை!

கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற்றதாக முடியாதே! அந்த மங்கையின் மாங்கனியன்ன மார்பகத்தின் மீது தனது மார்பகத்தை வைத்தவாறு பிரார்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். யார் அந்த ஆடவன்? ஆடவனா? அல்ல, அல்ல ஆண்டவன்! அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை! “மலர்மார்பா, வாய் திறந்து எனக்கருள்வாய்!” என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார் அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக்குள்ளேயே போய் விடுகிறார். போனதும் கண்ட காட்சிதான் குத்துவிளக்கு எரிகின்ற அறையின் கோலாகலக் காட்சி!

“குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்”