கலைஞர் மு. கருணாநிதி
31
அதன்படி ‘கண்ணடக்கம்’ செய்து வைப்பதாக வேண்டிக் கொண்டான். கண்ணடக்கம் என்றால் உனக்குத் தெரியுமல்லவா?”
“ஆமாம் தேவி! தங்கத்தாலோ வெள்ளியாலோ கண்போலச் செய்து, விக்கிரகத்தின் விழிகளிலே பதிப்பது என்பார்கள். நான் பார்த்ததில்லை!”
“பார்த்ததில்லையா? இதோ என் கண்களில் பதித்திருப்பதைப் பார்! இது தான் கண்ணடக்கம்! அந்தப் பக்தன் செய்த பிரார்த்தனை!”
“அதற்கும் நான் வந்த காரியத்தி்ற்கும் தொடர்பு என்ன தாயே?”
“முட்டாளே! இன்னும் புரியவில்லையா? கருணை காட்டிக் காப்பாற்றும் சக்தி பெற்ற என் விழிகளைத்தான் வெள்ளிக் கண்ணடக்கம் என்ற மூடி போட்டு அடைத்து விட்டானே; நான் எப்படியடா வெளியிலே கிளம்புவது? கண் கட்டப்பட்ட எனக்குக் கதி ஏதடா? அடைபட்ட கண்ணிலேயிருத்து அருள் எப்படியடா கிளம்பும்?”
“பக்தனல்ல அவன், பாதகன்! தாயே! அவன் தான் அக்கிரமம் செய்தான் என்றால், நீயாவது உடனே இந்த வெள்ளி மூடியை அகற்றியிருக்கக்கூடாதா?”
“அகற்றுவதா? பக்தன் செலுத்திய காணிக்கையப்பா இது! அகற்றுவது ஆகுமா? தகாது-தகாது!”
“பக்தன் அளித்ததை நீ அகற்றுவது தகாது! இதோ நான் அகற்றுகிறேன். உன் கண் திறக்கட்டும். கருணை பொழியட்டும். ஊரார் வாழட்டும்! உன் உலா நடைபெறட்டும்!!” என்று ஆவேசமாகப் பக்தன் பாய்ந்தான்,