உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

☐ 37


பார்க்கும்போதெல்லாம் போதையேறிக் காணப்பட்டன. சந்திராவும் தனக்குப் பக்கத்திலேயே கணவன் இருப்பதையும் மறந்தவள்போல, அவனை அடிக்கடி பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். இதைக் குமரேசும் ஜாடையாகப் புரிந்துகொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சந்திரா தன் கணவனோடு ஏதாவது பேசுவதும், குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதும் அதே நேரத்தில் எதிரே உள்ளவனைக் காணுவதுமாயிருந்தாள். குமரேசுக்கு ஏதாவது சொல்லிவிட வேண்டுமென்று மனங்குமுறியது. தன் மனைவி தனக்கருகில் உட்கார்ந்து கொண்டே இன்னொருவனின் அழகை ரசிப்பதென்றால்... இதை அவனால் நினைக்கவே முடியவில்லை!

அழகுக்காகத்தான் சந்திராவை அவன் மணம்புரிந்தான். அவள் வீட்டுக்கு வந்தபிறகு அறிவும் நிரம்பியவள் என்பது கண்டு மகிழ்ச்சிகொண்டான். குதூகலமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு அந்த ரயில் பிரயாணம் முட்டுக்கட்டையாகத்தான் வாய்த்தது. இவன் நெஞ்சிலே இந்தப் போராட்டம்; ஆனால் சந்திராவோ எதிர்ப்பலகைக்கு வீசும் கண்களை நிறுத்திய பாடில்லை. குமரேஸ் கொந்தளித்தான். முழுதும் கவனித்து ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்ற தீர்மானம் அவனை அமைதிப்படுத்தியது.

குழந்தை நன்றாகத் தூங்கிவிட்டது. வண்டியும் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தப்பெட்டியில் இருந்தவர்கள் தூக்க மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைக்கு ரயிலில் கிடைத்த புதுப்பாட்டியின் வாயிலிருந்து ‘புஸ் புஸ்’ என்று மூச்சு வந்துகொண்டிருந்தது. சந்திரா, குழந்தையைக் கீழே போட்டுத் தூங்க வைப்பதற்-