உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும், கலைஞரும், அவர்களைத் தொடர்ந்து பலரும் சிறுகதைகளின் வகைகள் என்று எவை எவை கூறப்பட்டனவோ அவை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டான கதைகள் பலவற்றை எழுதினர்.

அந்தக்கதைகள் ஏழ்மையை எடுத்துக்காட்டுவதாக, முதலாளித்துவத்தின் சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக, பண்ணைச் சீமான்களின் இரக்கமற்ற கொடுமைகளை விளக்கிக் காட்டுவதாக, சமுதாயத்தின் மேற்தட்டில் இருப்போரின் முகவிலாசத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக, சமூக சீர்கேடுகளை எடுத்துக்காட்டி அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக, விதவையின் அவலம், சாதிவெறி காரணமாக ஏற்படும் சஞ்சலங்கள் இவற்றைத் திறம்பட வெளிப்படுத்துவதாக அமைந்தன.

திராவிட இயக்க எழுத்தாளர்களின் நுழைவுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதைத்துறையில் ஒரு மறுமலர்ச்சியும் திருப்பமும் ஏற்பட்டன.*[1]

ஆனால் திராவிடஇயக்க எழுத்தாளர்களின் சிறுகதைப் பணி இன்றுள்ள ‘இலக்கிய அறிஞர்’களால் முறையாகப் பாராட்டப்படவில்லை. தமிழ் எழுத்துலகின் சகலமும் தாங்களே என எண்ணிக்

கொண்டிருக்கும் அல்லது கூறிக்கொண்டிருக்கும் சில ‘அறிவு ஜீவிகள்’ அவர்களை எழுத்தாளர்கள் என்றுகூட ஒப்புக் கொள்வதில்லை, படிக்காமலேயே எழுதும் ‘படித்த மேதைகள்’ அவர்கள்.


  1. * ‘அண்ணாதுரையின் இலக்கியப் பிரவேசத்துடன் மறுமலர்ச்சித் தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதோடு, நடையில் யாப்புக்குப் பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஒலியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கியமான திருப்பம் என்று சொல்ல வேண்டும்.’

    - சிட்டி, சிவபாத சுந்தரம், - ‘தமிழில் சிறுகதைகள்; வரலாறும் வளர்ச்சியும்’ (1989) - (பக் : 234)

V