உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சிறுகதைகள்



சம்பந்தம் இதைச் சொல்லிக் கொண்டே சங்கிலிச்சாமியின் பிணத்தை எடுத்து நிஷ்டையில் இருப்பது போல் நீட்டி மடக்கிப் படுக்க வைத்தான். பக்கத்திலிருந்த விளக்கை ஏற்றி வைத்தான். முதலியாரை இழுத்துக் கொண்டு வெளியே வந்து மாடிக் கதவையும் மூடினான். முதலியார் மிரள மிரள விழித்தார்.

சம்பந்தம் மெதுவாகச் சொன்னான்: “முதலியாரே! அஞ்சாதீர்! இரண்டாயிர ரூபாய் எடை வெள்ளியை நீர் இழந்தீர். இருபதாயிர ரூபாய் எடை நான் தருகிறேன்.”

காலை மலர்ந்தது. சாமியார் நிஷ்டை கலையப் போகிறதாம்: கதவைத் திறக்கப் போகிறார்களாம். கனவில் பண்ணை முதலியாரிடம் கதவு திறக்க உத்தரவாகிவிட்டதாம். இந்த விளம்பரத்தையொட்டி முதலியார் வீட்டின் முன் ஒரே ஜனத்திரள்! கதவு திறக்கப்பட்டது. எல்லோரும் மேல் மாடிக்குச் சென்றார்கள். சம்பந்தம் ‘கோ’வெனக் கதறினான். முதலியாரும் அழுதார்... இருவரும் நாடகத்தைத் திறம்பட நடித்தார்கள்.

அங்கே ஒரு கடிதம் கிடந்தது. அதில்-

‘நாம் இனி இந்த நாற்ற உடலுடன் வாழ விரும்பவில்லை. ஆவியாக இருந்து அருள் புரிவோம். மக்கள் என் சமாதியை வழிபட்டுச் சகல சம்பத்தும் பெறுவார்களாக!

இங்ஙனம்,

சங்கிலிச்சாமி

என்று எழுதியிருந்தது. சம்பந்தம் அதைப் படித்துக் காட்டினான்.

ஏக ஆடம்பரமாகச் சங்கிலிச்சாமியின் சமாதி விழா நடைபெற்றது. சமாதியில் இறைத்த பணம் அன்றைக்கே ஆயிரம் ரூபாய்! அடுத்த ஆண்டு சங்கிலியானந்த சாமி குருபூசை!

சாமிகளுக்கு மாபெரும் மடம். சம்பந்தம் மடத்தின் சாமி! முதலியார் மடத்தின் சொந்தக்காரர்! இரண்டாயிர ரூபாய் எடை வெள்ளிக் கட்டி நஷ்டம்!

ஆனால் இருபதாயிரம் ரூபாய் எடை வெள்ளிக்கட்டி லாபம்; அதுவும் வளர்கிற லாபம்!.... மக்களிடம் மடமை இருக்கும்வரை அந்த லாபம் குறையாது!