பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை.

}}

தெய்வப்புலமைத் திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள திருக்குறளின் கருத்துக்களுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம் பாரதம் முதலிய இதிகாசங்களினும், காந்தம் பாகவதம் முதலிய புராணங்களினும், சிந்தாமணி சிலப்பதிகாரம் முதலிய காவியங்களினும், பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களினும், வேறு பல நூல்களினும் இருந்து தெரிந்து எடுத்து எமது குலதெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடை கூறும் முறைமையில் குறள்களை உதாரணமாக எடுத்துக் காட்டி இற்றைக்கு மூன்று வருடங்கட்கு முன்னரே இந்நூலை முடித்து வைத்தும் வெளிப்படுத்தக் கூசி விலகி இருந்தேன். இங்ஙனம் இருப்ப, அறிஞர் பலர் இந்நூலுட் சில பாக்களைக் கேட்டு மகிழ்ந்து இதனை அச்சில் ஏற்றி அனைவருக்கும் உபகரிக்க வேண்டும் என்று என்பால் அன்பால் என்னைத் தூண்டினர். அன்னார் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு இது பொழுது இதனை வெளியிடுகின்றேன். விழுமிய உரையுடன் கெழுமித் தெளிவாய் வெளி வருகின்றது.

சரிதங்களைக் குறட்பாவில் அமைத்துத் திருக்குறள்களோடு இணைத்துத் தனிச்சீரும் சேர்த்திருத்தலினால் இந்நூல் முழுதும் நேரிசை வெண்பாவால் நிறைந்துள்ளது. தெய்வ வணக்கமும் அவையடக்கமும் உள்பட இதில் 1332 வெண்பாக்கள் அடங்கிப் பாயிரமும் நூலும் ஆய்ப் பரவியுள்ளன.

செவிக்கும் வாய்க்கும் சிந்தைக்கும் இனியவாய சிறந்த சொற்செறிவும், இருவினையும் நீக்கும் அருமருந்தனைய உயர்ந்த பொருட் பொலிவும், பொருந்தி விளங்கும் நமது தமிழ் வேதத்தின் அமிழ்தமயமான நீதி ஒழுக்கங்களையும் பொருள் நுணுக்கங்களையும் அறிந்து அனுபவித்து ஆனந்தம் அடைவதே மக்கட் பிறப்பின் மாண்பயன் ஆகும். அருமையான இத் தரும நூலை அருளிய நாயனாரே நமக்கு நல்ல தாயராவர். தாய்மார் தன