பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

கண்கூடான கருத்தாகும். எப்படிப்பட்டவர்களால் உவமைகள் - உதாரணங்கள் - கூற முடியும் என்பதும் அறிய வேண்டியதாகும். எல்லாராலும் உவமை - உதாரணங்கள் - கூறமுடியாதென்றும், அவ்வாறு பலரும் முயலுதல் பழுதாக முடியும் என்பதும் இயல்பாகும்.

ஆழ்ந்து அகன்ற கல்வித் திறமையும் சிந்தனையும் கொண்ட பேராசிரியர்களாலேதான் எளிமையும் இனிமையும் நிறைந்த உவமைகள் கூறமுடியும். அறிவும் ஆற்றலும் ஊறிப் போயிருக்கும் உள்ளங்கள் தான் உதாரணங்களைத் தரமுடியும். ஆழமும் அகலமும் கொண்டது கடலல்லவா ? கடலினை நினைவில் நிறுத்திப் பார்ப்போமானால் புலமை நிறைந்த பேராசிரியர்களின் பேராற்றல் நமக்கு விளங்கி விடுவதாகும்.

நுரை :

பெரிய சமுத்திரம் - பெருங் கடலின் தோற்றத்தினை நமது கண் முன்னே நிறுத்திக்கொண்டு பார்ப்போமாக. அகன்று பரந்து கரை தெரியாததாகத் தோன்றுகின்றது கடல், அகன்றிருப்பதால் காற்று வீசுகின்றபோது பெரிய அலைகள் தோன்றுகின்றன. அகன்று படர்ந்து இருப்பதால் ஆழம் அதிகமாகி இருப்பது இயல்பாயிற்று.

படர்ந்திருக்கின்ற இடத்தில்தான் காற்று வீசுவதால் அலைகள் மோதும். அலைகள் ஒன்றோடொன்று மோதுவதால் என்ன உண்டாகிறது ? அலைகள் மோதுவதால் வெண்மையான ‘நுரை’ உண்டாகின்றது. உற்று நோக்கும் போது புதுப்புது நுரைகள் தோன்றி மறைகின்றன.

கடல் ஆழமாகவும் அகன்றும் இருப்பது போல் கல்வி கேள்வி ஆராய்ச்சிகளில் அகன்றும் ஆழ்ந்தும் இருத்தல் வேண்டும். அப்படி இருப்பதால் சிந்தனைகள் என்னும் காற்று வீசிக்கொண்டே இருக்கும். சிந்தனைகள் உண்டாக உண்டாக புதுப் புதுக் கருத்துகள் என்னும் அலைகள் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட