பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 30

பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை, எல்லா அறமும் தரும். 296 பொய் சொல்லாமல் வாழ்கின்றதைப் போன்ற புகழ், ஒருவனுக்கு வேறு ஒன்றும் இல்லை. அது. அவன் வருந்தாமலே எல்லா நன்மைகளையும் அவனுக்கு கொடுக்கும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று. 297 பொய் சொல்லாமல், உண்மையாக நடந்து கொண்டால் போதும். மற்ற தான தருமம் எதுவும் செய்யாவிட்டாலும் நல்லது.

புறம் துாய்மை நீரான் அமையும்; - அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். 298 தண்ணிால் ஒருவனுக்கு உடம்பு தூய்மை உண்டாகும். அதுபோல், மனம் தூய்மையாக இருப்பது அவன் பேசுகின்ற உண்மையால் உண்டாகும்.

எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 299 இருளைப் போக்க உதவுகின்ற ஒளி விளக்குகள் எல்லாமே விளக்குகள் அல்ல. அறிவு உடையோருக்கு, மனத்தின் இருளை நீக்குகின்ற பொய் சொல்லாத உண்மையே, விளக்கு ஆகும். (திருவள்ளுவர் சொல்லும் விளக்குகள்: சூரியன், சந்திரன், தீ என்பன).

யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை-எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற. 300 நாம் உண்மையாக அறிந்தவைகளில், எந்த வகையிலும், பொய் சொல்லாத உண்மையைவிடச் சிறந்தது, வேறு ஒன்றும் இல்லை.

67