பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
87


தொழிலாளி அடிக்கடி வந்து காசு கேட்பான்; பெண்டாட்டிக்குப் பிரசவம் என்பான்; “அதனால் உனக்கு என்ன? “ என்று கேட்டுக்கொண்டு இராதே; பணம் கொடுத்து உதவி செய்க. அவன் வீட்டில் நிம்மதி இருந்தால் தான் மனம் ஒன்றி வேலை செய்வான்; அவன் நன்மை உன் நன்மை எனக் கருதுக; உயர்வு தாழ்வு கருதாதே; அவனை நன்கு அறிந்து பழகுக.

53. கற்றம் தழாஅல்
(சுற்றத்தினரைத் தழுவிக் கொள்ளுதல்)

நொந்துவிட்டால் வந்து உதவக் கூடியவர்கள் சுற்றத்தவர்தாம். தொழிலில் நொடிப்பு ஏற்படலாம்; எதிர்பாராத கஷ்டம் வந்தாலும் வரலாம்; பழைமை பாராட்டி உதவுவர்.

நாலு காசு மட்டும் இருந்தால் போதாது; நாலுபேர் வரப்போக இருக்க வேண்டும். அவர்கள் நல்லுறவு உன் செல்வத்தை வளர்க்கும்; அவர்களால் நன்மைகள் வளரும்.

குளத்துக்குக் கரை இல்லாவிட்டால் அது பெரிய குறைபாடு ஆகும். வளத்துக்கு வகையான சுற்றம் இல்லா விட்டால் அது வகைதெரியாமல் மறைந்துவிடும்.

சுற்றத்தவர் சுகம் விசாரிக்க வருவர்; நீயும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிக. கடன் கேட்பார்கள்; மறுத்துவிடாதே; உதவி கோருவர்; தள்ளாதே. இனிமையாகப் பேசினால் அவர்கள் இதயம் குளிரும்.