பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
137

கூடாது என்பனவற்றை எண்ணிக்கூடப் பார்க்க மாட்டான்.

யார் பேச்சையும் கேட்கமாட்டான்; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பான்; மற்றவர்கள் உண்டு என்றால் இவன் இல்லை என்பான். எதனையும் மறுத்துப் பேசுவது அவனுக்குப் பழக்கமாகிவிடுகிறது. இந்த அறிவின்மையைச் சுட்டத்தான் மற்றவர்கள் இவனை அறிவிலி என்று அழைக்கின்றனர். அதுவே புல்லறிவு ஆண்மை எனப்படுகிறது.

மற்றவர்கள் புத்தி சொன்னால் அதனைக் கேட்க மாட்டான்; தொடர்ந்து பிழைகளைச் செய்துகொண்டே இருப்பான். பிடிவாதம் அவனுடைய போக்காக இருக்கும். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இருக்காது. அதனால் அவன் அந்தக் குடும்பத்திற்குச் சுமையாகி விடுகிறான். நல்லது செய்யாவிட்டாலும் மன்னித்து விடலாம். தொடர்ந்து தவறுகளையே செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது?

86. இகல்
(மாறுபாடு)

இகல் என்பது கடத்தல் என்னும் பொருளினது; எல்லை கடப்பது இகல்; அதாவது மாறுபடுவது எனப்படும்.

இயன்றவரை மறுத்துப்பேசாதே; பொறுத்துக் கொள்; கருத்து மாறுபட்டால் பகைகள் விருத்தியாகும்.

அவன் உன்னோடு வேறுபடுகிறான்; அதனால் மாறுபாடு கொள்கிறான். அவனிடம் அதனால் பகை கொள்ளாதே; கருத்து வேறுபாட்டுக்கு மதிப்புத் தருக.