பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

வேண்டும். அத்தகைய நன்மக்களைப் பெற்றால் அது பெற்றோர்களுக்குப் பெருமை அளிப்பதாகும்; வலிமை சேர்ப்பதும் ஆகும்; அவர்கள் கவலை நீங்கி வாழ முடியும்; ஏழு பிறப்புக்கும் அவர்களை எந்தத் துன்பமும் வந்து தாக்காது; அவர்களைத் தம் உடைமையாக மதித்துப் போற்றலாம். மதிக்கத்தக்க நன்மக்களைப் பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; அஃது அவரவர் செய்த நல்வினையின் பயனே என்றும் கூறலாம். ஒருசிலருக்கே இந்த நல்வாய்ப்புக் கூடி வருகிறது. அவர்களை அதிர்ஷ்ட சாலிகள் என்றுதான் கூற முடியும்.

குழந்தைகள் மாபெருஞ் செல்வம் என்பதனை மறுக்க முடியாது. அவர்களால் நன்மையும், சிறப்பும், உயர்வும் கிடைக்கின்றன. அவர்கள் தாம் அள்ளித் தின்னும் சோற்றைச் சிதற வைத்து இருகையாலும் பிசைந்து தின்றது போக விட்டதை உண்ணும் பேறு கிடைப்பது மகிழ்வுக்கு உரியது. அமுதத்தைவிட அது மிக்க இனியதாகும்.

குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்வதற்கு நிகரான இன்பம் எதுவுமே இருக்க முடியாது. உச்சிதனை மோந்தால் உள்ளம் குளிர்வது உறுதி; மெச்சி ஊரார் அவனைப் புகழ்ந்தால் மேனி சிலிர்த்துவிடும். நச்சி அவன் சில சொற்கள் பேசினால் செவிக்கு அவை இன்ப ஊற்றாக அமைந்துவிடும். மழலைமொழி பேசும் அந்த இனிய சொற்கள் எங்கிருந்துதான் அந்த இனிமையைப் பெற்றனவோ! யாழும் குழலும் அவற்றின்முன் நிற்க முடியாமல் தம் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன. இசையினும் இனியது தம் குழந்தைகளின் மழலைச்சொல் என்பதனை ஒப்பிட்டுப் பார்ப்பவர் அறிவர்.

அறிவுடைய மக்களைப் படைத்துத் தருவது செறிவுடைய கல்வியால் இயல்வதாகும்; கற்றவர் கூடும்