பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 141 64. அமைச்சரது இயல்பு செயலுக்கு வேண்டிய கருவி, ஏற்ற காலம், செய்யும் திறம், செய்யும் அரிய செயல் ஆகியவற்றை மாண்புடன் அறிந்து நடப்பவனே அமைச்சன். 631 அஞ்சாமை, நற்குடிப் பிறப்பு, உயிர்களைக் காக்கும் திறன், கல்வியறிவு, முயற்சி ஆகிய ஐந்தும் ஒரு சேரச் சிறப்புற்றிருப்பவனே அமைச்சன். 632 பகைவர்க்கு வேண்டியவரைப் பிரித்து விடுதலும், அவர்க்கு வேண்டுவன செய்து அவரைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ளலும், தம்மை விட்டு முன் பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளலும் வல்லவனே அமைச்சன். 633 எதையும் நன்கு ஆராய்தலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், தக்கது இது தகாதது இது என உறுதியாகத் துணிந்து சொல்லலும் வல்லவனே அமைச்சன். 634 அறத்தை உணர்ந்து, அறிவு நிறைந்தமைந்த சொல் பேசுபவனாய், என்றும் செயலாற்றும் வழிமுறை அறிந்தவனே அரசனுக்குச் சூழ்ச்சித் துணைவன். 635 நூல் கற்ற அறிவோடு இயற்கையான அறிவு நுட்பமும் உடையவர்க்கு, மிகுந்த நுட்பம் உடையவனாய் முன்னிற்கும் செயல்கள் யாவை உள? 。636 புதிய செய்முறைகளை அறிந்திருந்தாலும், உலகத்தின் இயற்கையான நடைமுறையையும் அறிந்து அதற்கேற்ப அமைச்சன் செயல்பட வேண்டும். 637 பிறரது அறிவுரையையும் அழித்துத் தானாகவும் அறிய முடியாதவனாய் அரசன் இருந்தாலும், அருகிலிருக்கும் அமைச்சன் அரசனுக்கு நன்மையானவற்றை அஞ்சாது எடுத்துரைத்தல் கடமையாகும். 638 அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சனை விட, பக்கத்தில் எழுபது கோடி பகைவர் இருப்பது நல்லது. 639 திறமையற்ற அமைச்சர், முன் கூட்டி முறைப்படி ஆராய்ந்திருப்பினும் செயல்களை நிறைவேறாதனவாய்ச் செய்து விடுவர். 640