பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கஉ0

முன்னுரை


வழியாக ஒருவாறு உய்த்துணரப்பெறுகின்றனவே எனினும், அவற்றுக்கும் எவ்வகைச் சான்றுறுதியும் இல்லை என்க. அதுபோலவே அவர் உழவோ, நெயவோ போலும் யாதாமொரு தொழிலோ அரச கரும வினையோ ஆற்றியிருக்கலாகும் என்பதும் உறுதியாகத் தெரியவரும் செய்தி அன்று.

ஆனாலும், அவர் தன்மானமும், தன்முயற்சியும் கொண்டே வாழ்ந்திருக்க முடியும்' என்பதும், அவ்வாறாக வாழ்கையிலும் அவர் மிகுந்த ஏழைமை நிலையிலேயே இருந்திருக்கக்கூடும் என்பதும், அவர் ஏழைமை பற்றி எடுத்துரைக்கும் உண்மை நிலைகளாலும், வேறு சில கூற்றுகளாலும் நன்கு புலப்படுகின்றன.

நூலுள் வரும் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களால் அவர்தம் ஏழைமை நுகர்ச்சி நன்கு வெளிப்படுகிறது. அவ்வதிகாரங்களுள் வரும், -

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்' – 1044.

'நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்' - 1046.

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது' - 1049,

- என்னும் குறள்பாக்களால் அவர் நுகர்ந்த வறுமையும் நுகர்ச்சியும்,

'தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிது இல்' - 1065.

- என்பதில் அவர் வறுமையால் மனம் சோர்வுறாது யாதாம் ஒரு தொழில் முயற்சியாலேயே வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும்;

'ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் - 1066,


- என்பதில், அவர் தன்மானம் இழந்து முற்காட்டிய புலவர்கள் போல் எவரிடமும் போய் இரந்தோ, சார்ந்தோ எய்தற்கரிய புலமையைப் புறம் போக்கியோ, பொருளுக்கு விற்றோ பிழைத்திருக்க இயலாது என்பதும் உறுதியாக மிக நன்கு புலப்படுகின்றன என்க. அவ்வாறு அவர் இரவு வாழ்க்கை வாழ்ந்திருப்பின் இத்தகைய உயரிய, செயற்களிய வாழ்வியல் அறநூலைச் செய்திருக்கவும் இயலாது என்று திண்ணமாய் நம்புக

இனி , அவர் யாத்துள்ள இப்பேரற நூலுள் பொதுவுடைமை. நலச் சிந்தனைகளையும், இவ்வகையில் முதன் முதலாக வெளிப்படுத்திய பாங்கும்