௨௨
முன்னுரை
நம் புலப்பார்வைக்கு முன்னர்த் தென்படுவனவாகின்றன! மற்ற உரைமுயற்சிகள் பெரும்பான்மையவும் மயற்சியைத் தருவதோடு - அயர்ச்சியிலும் ஆழ்த்துவனவாகின்றன! ஆக, மிகப் பெரும்பான்மையாக முன் குவிந்து கிடக்கும் பல்வகை உரைமுயற்சிகள், முனைப்புற்ற தெள்ளறிவுச் சிந்தனையர்க்கு இடையிடையிலான இடறல்களையும் முரணுறுகளையுங்கூடத் தருவனவாகவேதாம் நிற்கின்றன!
ஓருண்மையை இக்கால் நாம் இங்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். தெளிந்த திருவள்ளுவர்வாயுரைக்கான மெய்யுரை காணுவதற்கு அடிப்படையான பல்லாயிரங்கூறுகளும், சிந்தனைக் கிளர்ச்சியூட்டங்களும் — நமக்கு இன்றைக்குக் கிடைக்கும் “பரிமேலழகம்” உள்ளிட்ட பழையவுரைகள் சிலவற்றாலும், பிற்றைக்கால அண்மைக்கால அறிஞர்பெருமக்களால் விரிக்கப் பெற்ற, சுட்டப்பெற்ற வினாத்தொடுக்கப்பெற்ற பல்வேறு எழுச்சியுரைகளாலுமே உருவானவை!. . . . எனவே, முன்னைய “அவை எவற்றையும் - அறிவுத்துலக்கமுடைய இக்கால், முழுமையும் எளியவையாக எள்ளவும் அவ்வாறு விள்ளவுங் கூடாது! அவ்வாறு விள்ளுவது சால்புடையதுமன்று; அவ்வாறு, முற்ற எள்ளுவது சான்றாண்மை சான்றதுமன்று; அத்தோடு, தெள்ளிமை சான்ற போக்குக்குரிய தன்மையும் அன்று!
ஒட்டு மொத்தமாக, - இதுகாறும் வந்துற்ற உரைநூல்கள், நம்மை முழுமையாக நிறைவிக்கவில்லை! இக்கால அறிவு வளர்ச்சிக்கேற்ற நிலையில் அப்பழைய கருத்துச் சாறங்களின் மெய்ந்நிலைகளைப் புரிந்துகொள்ளும்வகையில் - அவை தெளிவிக்கவேயில்லை! ஒரு குறிப்பிட்ட மதச்சார்புடைய உள்ளத்தவர் ஒருவர் — அதற்கு உரை செய்கையில் - தம் மதமனத்தின் கருக்களை உள்நுழைத்தவாறே கண்டும் - காண்பிக்கவுஞ் செய்கின்றார்! கடவுள் மறுப்புக் கொள்கையாளர் தம் கடவுளின்மைக் கருத்துக் கருப்புக் — கண்ணாடியை மாட்டிக்கொண்டவாறே குறளை உறுத்து நோக்கி, தம் கருத்துக்குரிய உரையேற்றிக் கண்டு அதனையே விண்டு விளக்கி உணர்த்த முற்படுகின்றார்! தம் பகுத்தறிவுக்கருத்து நோக்கில் ஒவ்வோரிடத்தையுங் கண்டு பகுத்தறிவுரையாகவே வள்ளுவத்தைப் பகர்கின்றார்! இவ்அனைத்து நிலைகளிலும், ஓர் ஊடிழை உள்ளோடுகின்றது! அஃதாவது - தம்தம் தனிக்கருத்துக்களின் பிழிவையெல்லாம் வள்ளுவப்பாலில் வாக்கி வடித்துக் கலந்து கலக்கி உள்ளுவந்து நமக்கு ஊட்ட முனையும் ஆர்வப் போக்காலாகிய ஊடிழையே, - அது!