பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௩௯


 

பொது முன்னுரை

 
1. உரை எழுத விழைந்த நோக்கமும்
சூழலும் உருவாக்கத் திட்டமும்!

அழிவற்ற நம் அரும்பெரும் திருக்குறள் நூலுக்கு இன்றுகாறும் நூற்றைம்புதுக்கு மேற்பட்ட உரைகள் அது தோன்றிய நம் அறத்தமிழ் மொழியிலும், அண்டை அயல் மொழிகளிலும் தோன்றித் துலங்கி, மூல நூலுக்கு உயிர்ப்பும் செழிப்பும் சிறப்பும் பரப்பும் உயல்வும் பயில்வும் ஊட்டி வருகின்றன. திருக்குறள் போல் உலகில் தோன்றிய வேறு எம்மொழி நூலுக்கும், எவ்வற நூலுக்கும் இப் பலர்பால் உரைப்பேறு வாய்த்ததில்லை எண்று வலிந்தும் துணிந்தும் கூறலாம்.

மக்கள் குலம் முழுமையும் கருத்தினும் செயலினும் மேம்பாட்டினும் அளாவியும், அனைத்துக் காலத்தையும் இடத்தையும் தழுவியும் நிற்கும் ஒருதனிப் பேறாய் நின்றிலங்கும் ஓர் அரும் பெரும் அரிய அறநூலுக்கு, இத்துணை மாந்தப் பார்வை செல்லுவதும், அதன் மேல் இத்துணை ஆய்வு நோக்குகள் கொள்ளுவதும் வியப்பன்று; உரைப் பெருக்கம் சார்வது செயற்கையுமன்று; இயற்கையே! இந்நிலை இந்நூலுக்குப் பெருமையே தவிர, எனைத்தானும் சிறுமையே அன்று.

ஆயினும், இந்நூலுக்கு இன்றுவரை வெளிவந்த எம் கண்களிற் பட்ட நூலுரைகள் யாவும், அந்நூலின் கருப்பொருளுக்கும் திருப்பொலிவிற்கும், அஃகியகன்ற அறிவுச் செறிவிற்கும், உணர்வுத் திணர்வுக்கும், மெய்ப் பொருளுக்கும், உய்ப்பு அருளுக்கும் ஏற்றவாறு செய்யப் பெற்றுள்ளனவோ எனில், எம்மைப் பொறுத்த அளவினும் எம் சிற்றறிவிற்கு எட்டிய உணர்வினும் இல்லை என்றே சொல்ல வேண்யுள்ளது.