பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௪௧


– என்றோர் உறுதி கூறியிருந்ததும், பின்னர் யாம் மேலும் ஓர் உரையெழுதத் துணிந்ததும், காலத்தால் நேர்ந்த கட்டாயக் கருத்து வெளிப்பாடுகளே! அவ்வெளிப்பாட்டிற்கும் அம்மெய்ப்பொருள் உணர்வே கரணியமாக அமைந்ததெனில், அது புனைவோ பொய்யோ ஆகா தென்க.

இனி 1975 - 76 களில், எம் சிறையிருப்பின்பொழுது, ‘திருக்குறள் மெய்ப்பொருள் உரை’யை, யாம் எழுதத் திட்டமிட்டபடி, அஃது ஏறத்தாழ ஐயாயிரம் பக்க அளவில் வருமென்பதும், அவ்விரிவும் விளக்கமும் பற்பல சிறப்பியல்களும் வாய்ந்த உரைக் கருத்துகளை அடிதாங்கி, ஏறத்தாழ ஐம்பதினாயிரம் குறிப்புகளும், நூற்சான்றுகளும் கொண்டிருக்குமென்பதும், அவற்றுக்குரிய ஆராய்ச்சிக் காலம் ஐந்தாண்டுகளும், ஆக்கக் காலம் ஐந்தாண்டுகளுமாக மொத்த உருவாக்கக் காலம் பத்தாண்டுகளாக இருக்குமென்பதும், அக்காலத்தில், எமக்கு, உணர்வும், அறிவும், உழைப்பும், ஒரே நோக்கமும், இயற்கையிலேயே பொருந்திய ஓர் அணுக்கத் துணையாளர் இன்றியமையாத் தேவை என்பதும், அவரும் ஓர் ஆண்துணையாக விருப்பின் பொருந்தாமற் போகுமாகலின், பெண் துணையே பொறையும் நிறையும், அமைவும் சமைவும், எண்ணச் சிதர்வின்மையும் கொண்டு, இயங்கல் தகுதியும் உடையதாக இருக்கும் என்பதால் அத்தகு துணை வாய்க்க வேண்டும் என்பதும், அஃதோர் இறைப் பேறாகத்தான் அமைய முடியும் என்பதும், பிற சிலவும் எண்ணி வகுத்துக்கொண்ட கோட்பாடுகள் ஆகும். அவ்வகையில் அக்காலே அம்முயற்சி தொடங்கி, ஏறத்தாழ பத்தாயிரம் குறிப்புகளும் எடுக்கப் பெற்று, பிற ஆய்வுகளிலும் தோய்ந்து, உரைப்பணி தொடர்ந்து நடந்து வந்தது.

யாம் ஏற்கனவே எடுத்துப் போட்டுக்கொண்ட இலக்கிய ஆக்கப் பணிகள், இதழ்ப் பணிகள், சொற்பொழிவுப் பணிகள், இன, நாட்டுப் போராட்ட முயற்சிகள், முதலியவற்றுடன், திருக்குறள் மெய்ப்பொருளுரை எழுதுவதையும் . ஒரு கூடுதல் பணியாகத் தோள்மேல் சுமந்து கொண்டதால், அம் முயற்சி இடையிடை மிகவும் மெதுவாகவே நடந்து வரலாயிற்று. தகுதுணை அமையக் காலமும் கருத வேண்டுவதாயிற்று.

இந்நிலையில் யாம் வேண்டியபடி, 1982 திசம்பர் இறுதியில், நற்றுணை யொன்றும் வந்து வாய்த்திடக் காலம் கைதர விருந்தது. ஆனால், எம் உயரிய நோக்கத்தை - அறிவியல் ஆக்கத்தை, உலகியல் நோக்கோடு வைத்துப் பொருத்திப் பார்த்த எம் வாழ்வியல் மனைத்துணை யுறவுகள், இறையருளால் வரவிருந்த அவ் வினைத்துணை புறவுப் புதுமைக்கு ஏதமும் இழிவும் பழியும் கற்பித்து, எதிரேறி நின்று, வாய்வழக்குச் சதிராடி, எம் உள்ள உணர்வுகளை நூறுங்கடித்து, எம் அறிவையும் கிறங்கவைத்து, அச்