பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

அரு 


கடமைகளாக்கி அவற்றைத் துறவறவியலில் கூறினார் என்று உய்த்துணர்ந்து கொள்க.

என்னை? இல்லறம் மேற்கொண்டொழுகுவான் ஒருவன், தன் குடும்பத்தாரிடமும், உலகத்தாரிடமும் கலந்து பழகுதல் தவிர்க்கவியலாத ஒன்றாகையால், அருள் மேற்கொண்டொழுகுதலும், புலால் மறுத்தலும், தவம் இயற்றுதலும் பொய்யாமை ஆற்றுதலும், வாய்மை பேணுதலும், வெகுளாமை காத்தலும், இன்னா செய்யாமையும், ஒரோவொருகால் ஈ, எறும்பு, கொசு, எலி, பிற நச்சுயிரிகள், தாக்கவரும் கொடுவிலங்குகள் முதலியவற்றின்பால் கொல்லாமை மேற்கொள்ளுதலும், பொருள் நலன்களைத் தேவையின் பொருட்டு விரும்புதலும், தேடுதலும், காத்தலும், துய்த்தலும் ஆகிய வினைகளுக்கிடையில் நிலையாமை உணர்தலும், தன் தனி உயிர்நலம் கருதித் துறத்தலும், பொய்யும், புனைவும், போலிமையும் மிடைந்து விளங்கும் உலகத்து மெய்யுணர்தலும், ஆரா இயற்கை அவா நீத்தலும், ஊழ் வலியுணர்தலும் ஒல்லுமோ, ஒல்லாது ஆகலின், என்க.

அத்துடன் கூடா ஒழுக்கத்துச் சிற்சிலகால் நெஞ்சிடறுதலும், நேர்மை குலையுதலும், மழித்தலும் நீட்டலும் ஒழியாமையும் நேருமாம் என்க. இவ்வாறு வழுவி வழுவிச் சறுக்கலும் இழுக்கலும் என்று இவற்றிடை மனமும் மொழியும் மெய்யும் மழுங்கவும் அழுங்கவும் மயங்கவும் தயங்கவும் அல்லற்பட்டு ஆற்றாது வாழ்ந்து சலிக்கும் இல்லறத்தானுக்கு, இச்சான்றாண்மைக் கூறுகளும் துறவுணர்வுகளும் வலியுறுத்தப்பெறுவது முழுப்பயன் தருவதாகாது என்று நன்குணர்ந்த பேராசான், இவ்வனைத்துக் கூறுகளையும், உலகியல் முனிந்து மெய்யறிவியல் நினைந்து, துறவியல் துணிந்தவர்க்கே வலியுறுத்துவான் வேண்டி, இல்லறவியலில் வையாது, துறவறவியலிலேயே வைத்துக் கூறினார், என்க.

இனி, இது போலவே, இல்லறம் புகாது, நேரடியாகத் துறவறம் நோற்கப் புகுவார்க்கும், புகுந்தார்க்கும் இன்பத்துப் பால் எனப் பெறும் காமத்துப் பால் முழுவதும் தேவையின்றெனக் கொள்வதே அறமாம் என்க.

அத்துடன், இவ்விடத்து, இனியொன்றையும் நாம் கவனித்தல் இன்றியமையாததாம். அஃது, நூலாசிரியரின் திருவுளக் கொள்கையாம் ஆகலின்,

என்னை? திருவள்ளுவப் பெருந்தகைக்கு உற்ற உயர் கொள்கை யாதெனின், இல்லறத்துப் படிந்து, உயிர்க்குற்ற பிறவி நோக்கமாகிய காமவின்பத்துத் துய்ப்பறியாமல், உலகியலை அறநோக்கமாகவும் தவிர்த்துத் துறவு பூணுதல் தேவையுமன்று சிறப்புமன்று என்று கருதுவதே என்க. என்னை?