பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௯௩



இவ்வாறு ஆணாளுமை மிகுதியும் பொதுவாளுமை குறைவுமாக உள்ள கூற்றுகளைத் திருக்குறளில் கண்டு, திருவள்ளுவர் ஆணாளுமையை (ஆணாதிக்கத்தை)யே மிகுதியும் பாராட்டுபவர் என்று தவறாக மதிப்பிட்டுவிடலாகாது.

இவ்விடத்தில் ஆண், பெண் ஆளுமைகள் பற்றியும் பொதுவாளுமை பற்றியும் உலக மாந்தவியல் வரலாற்று நிலைகளைக் கொஞ்சம் நினைவுகூர்தலும் வேண்டும்.

உலக மாந்தவியலின்படி, தொடக்கத்தில் பெண்ணாளுமையே இருந்தது என்பதும், பின்னர்தான் படிப்படியே ஆணாளுமை தலையெடுத்தது என்பதும், அந்நிலை இன்றுவரை நிலைப்பட்டே உள்ளது என்பதும், அறிவியலும், உரிமையியலும், பொதுமையிலும் வளர வளரவே ஆணாளுமையை எதிர்க்கின்ற நிலையும் தோன்றிச் சமநிலைப் பொதுவாளுமைக்கு வித்திடப்பெற்று வளர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். இவ் வரலாற்று வழிநிலைகளில், தமிழினத்தைப் பொறுத்த வரையில் இஃதொரு பெண்ணாளுமை இனம் என்பதும், ஆரிய வருகைக்குப் பின்னர்தான் இஃதோர். ஆணாளுமை இனமாக மேலோங்கி வந்தது என்பதும் அறியத் தக்கன.

இதற்குத் தமிழினத்தில் உள்ள தாய்மொழிக் கோட்பாடும், தாய்த்தெய்வ மிகுதிக் கோட்பாடும், தாய்நாட்டுக் கோட்பாடும், இல்லறத்தில் தாய்த்தலைமைக் கோட்பாடும் உறுதியான சான்றுகளாகும். தமிழினத்தில்தான், உலக இனங்களிலேயே தாய்மைக்குப் பெரும் மதிப்புக் கொடுக்கப் பெற்றுள்ளது. பெண்மை பெரிதும் மதிக்கப்பெற்றது என்க.

இஃதல்லாத ஆரியவியலில் ஆணாளுமையே தலைமை பூண்டிருந்தது என்பது அறியத்தக்கது, அவர்கள் தந்தை மொழி என்றும், தந்தை நாடு என்றும், இந்திரன், அக்கினி, வருணன், வாயு, முதலிய ஆண் தெய்வங்களே ஆளுமைத் தெய்வங்களென்றும் கொண்டிருப்பதே அதனை வலியுறுத்தும் என்க. ஆரியர்க்ளின் இந்திய வருகைக்கும், பின் தென்னாட்டு வருகைக்கும் பின்னரே, தமிழினத்தினும் பெண்ணாளுமைக் கோட்பாடு படிப்படியாகக் குறைந்து, ஆணாளுமைக் கோட்பாடே தலையெடுத்தது. அத்துடன் பெண்ணடிமைத் தனமும் வேரூன்றியது. இவை விரிக்கில் பெருகும், ஆகையால் சுருங்கக் கூறப்பெற்றது. ஆயினும் இங்கு, ஓர் உண்மையை மறந்துவிடலாகாது. உலக இனங்களிலேயே தாய்த்தலைமையைக் கொண்டிருக்கும் தமிழினந்தான் முந்தித் தோன்றிய மூத்த இனமென்றும், தந்தைத்தலைமையினங்களெல்லாம் பிந்தித் தோன்றிய அதன் பிறங்கடை இனங்களென்றும் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, திருவள்ளுவர் காலம், பெண்ணாளுமை படிப்படியாகக்