பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

அ - 2 - 2 வாழ்க்கைத் துணைநலம் - 6


விளைவையும் தராது. இந்நிலையில் அவர்கள் தம் நடுநிலையான மனவுறுதி ஒருமையுணர்வால் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் காவலே மிகச்சிறந்ததாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. முற்குறளில் கூறப்பெற்ற, தன்னையும் தகைசான்ற சொல்லையும் காத்துக்கொள்ளாத இல்லத்துணைவியால் வரும் ஏதங்களும், இழுக்குகளும் வராமல் செய்யும் முயற்சியின் வகை இதில் கூறப்பெற்றது என்க.

2.சிறை காக்கும் காப்பு : இல்லக் கிழத்தியை, அவள் தவறு செய்து விடாமல் இருக்க, சிறைவைத்துக் காப்பதுபோல், அடைத்துவைத்தும் அதன்மேல் காவல் செய்தும் காக்கின்ற காப்பு.

3.எவன் செய்யும் மகளிர் : திருமணம் செய்து கொண்ட மகளிரை அக்கட்டுக் காவல் என்ன செய்துவிட முடியும் ? ஒன்றும் செய்ய முடியாது. உலகப் பெரும்பான்மை நோக்கி மகளிர் என்றார்.

4.நிறை : நடுநிலையான ஒருமை மனவுறுதி - கற்புணர்வு. 'நிறைகாக்கும் காப்பு' என்பதற்குப் 'பெண்மையில் நிறைமையைக் காக்கும் பாதுகாப்பான நிலை' என்றும் பொருள் கூறுவர்.

நிறைமை ஒரு மனவொழுக்கமாகலான், அதனை எவ்வகைப் புறப் பாதுகாவலும் காத்தற்கியலாமையான், அப்பொருள் ஒரு முகமன் வழக்கமாக (உபசார வழக்காக) அமையுமேயன்றிச் செயற்பாட்டிற் குதவாதென்க.

இக்குறளினது கூற்றால் நூலாசிரியர் காலத்துப் பெண்களைச் சிறைவைத்தும் காத்தமை புலப்படுகிறது என்க. இது தொடர்வது இன்றும் சிற் சில இடங்களிலும் இனங்களிலும் உண்டென்க.

5.இது, பெண்டிர்க்கு அவர் தம்மைக் காக்கும் மனவுறுதியே காவலாவதன்றிப் புறக்காவலால் ஒரு பயனும் விளைவதில்லை என்றார் என்க.