பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

111


மேலோங்கிக் கூறியதாகலின், அதன்பின் வைக்கப்பெற்றது, என்க.


உகக. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு. - 211

பொருள்கோள் முறை:

உலகு மாரிமாட்டு என் ஆற்றும் கொல்லோ
கடப்பாடு கைம்மாறு வேண்டா.

பொழிப்புரை: இவ்வுலகமானது (தன் அனைத்து ஆக்கங்களுக்கும் தண்ணீர் வழங்குகின்ற) மழைமேகங்களுக்கு என்ன நன்றியைத் திருப்பிச் செய்கிறது? ஒன்றும் செய்வதில்லை. அதுபோலவே, இங்கு (மேனிலையில் உள்ளவர்கள், அவ்வாறில்லாத ஏழை, எளிய மக்களுக்குச் செய்யும்) பொதுமை நலக் கடமையறங்களும் கைம்மாறு கருதப்பட வேண்டாதவை.

சில விளக்கக் குறிப்புகள்:

1) இச் செய்யுளின்கண், நூலாசிரியர், பொதுமக்களுக்குச் செய்யவேண்டிய பொதுமைநலக்கடமையறங்களுக்கு, ஓர் இயற்கை உவமையைக் கூறி, இங்கு ஏற்கனவே நல்லநிலையில் வாழும் மேனிலை மக்களும் அவ்வாறு வாழ வாய்ப்பில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவி வாழுகின்ற கடமையை உணர்த்துகின்றார். அவர் காட்டும் உவமையாகிய மழையின் செயற்பொருள் மிகவும் உன்னிப்பாகக் கருதி உணரத்தக்கவையாம், என்க.

2) உலகு மாரிமாட்டு என் ஆற்றும் ?: இவ்வுலகமானது, (தன் அனைத்து ஆக்கங்களுக்கும் தண்ணீர் வழங்குகின்ற) மழை மேகங்களுக்கு என்ன நன்றியைத் திருப்பிச் செய்கிறது? ஒன்றும் செய்வதில்லை என்க.

உலகு : இதிலுள்ள மக்களைக் குறித்தது.

மாரி : மழை. இச்சொல் தொடக்கக் காலத்தில், கோடை மழையை மட்டும் குறித்தது. பின்னர் இது பொதுவாக எல்லா மழையையும் குறித்த சொல்லாயிற்று.

 'காலொடு பட்ட மாரி' - நற் : 2 : 9

(காற்றொடு கலந்து பெய்த கோடைமழை)

 'உரம் சுடும் கூர் எரி ஆள்வினை மாரியின் அவியா' - அகம்:279:7-1

- உரம் (அ) வரம்