பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

151



இஃதொரு குமுகாய உணர்வு. ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்து, மக்கள் நலத்தை வளர்விக்கும் நிறைவிக்கும் - ஒரு மாந்தநேய உணர்வே ஈகை இஃதோர் அன்புணர்வு - அருளுணர்வு அடிப்படையில் நிகழ்வது.

இவ்வுதவியும் திருப்பிச் செய்யும் பான்மையற்றது. அவ்வாறு திருப்பித்தர வேண்டிய ஒருநிலை அவ்வுதவுவார்க்கு இருப்பின், ஊதியமற்ற நிலையில் அதைத் திருப்பிச் செய்யும் கடப்பாடுகறி உதவுதல் தவறிலதாம், என்க.

அது காலத்தால் செய்த உதவியாகக் கருதப் பெறும். அதுவும் பெருமையுடையதே.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது' - 102

என ஆசிரியர் கூறியுள்ளதை ஒர்க.

தமிழினத்தின் ஈகைப் பண்பு:

தமிழினத்தின் குமுகாயப் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளைப் பார்க்கும் பொழுது, ஈகை உணர்வு ஒரு பேரறமாகவே கருதப் பெறுவது, மிகத்தொன்மைக் காலந் தொட்டே தொடர்ந்து இருந்து வருவதை உணரலாம். இது மக்களின் நல்லியக்கத்திற்கும், குமுகாயப் பண்பமைவிற்கும், உலகப்பொதுநலத்திற்கும் மிக்க பயன்படும் ஓர் உணர்வாகும்.

மிகத்தெளிவாகவும், வெளிப்படையாகவும் மதிப்பிடுவதானால், தமிழினத்தின் மரபுவழிச் சிறந்து விளங்கும் இவ்வுணர்வு, இவ்வுலகின் வேறெவ் வினத்திலும் இந்த அளவில் வேரூன்றியிருக்கவில்லை - என்பதை, வேற்று இன மக்களின் பண்பு வரலாற்றையும், இலக்கியங்களையும் ஓரளவு உணர்ந்தவர்கள்கூட முழுமையாக ஒப்புவார்கள்.

அதுவும், இவ்வுணர்வை இந்நூலாசிரியப் பெருந்தகை ஒர்ந்து உணர்த்துவதைப் போல், வேறு எந்நூலாசிரியரும், இத்துணைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் உணர்த்துவதாகக் கூறவியலாது.

மக்களின் உயிர் வாழ்க்கையே பிறர்க்கு உதவுவதில்தான் சிறப்பும் பெருமையும் பெறுகிறது. அதைவிட உலக மாந்த வாழ்வில் வேறு சிறப்பில்லை என்று பிறவிக்கே ஈகையறத்தை இலக்கணப் படுத்தும் தன்மையை, இந்நூலில் தவிர, வேறு எந்த இலக்கிய அல்லது அறவியல் நூலிலும் காணற்கியலாது, என்க.

'நல்லாறு எனினும் கொளல்தீது, மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று' - 222