பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அ-2-16 பயனில சொல்லாமை 20


என்பதை அவனின் பயனில்லாத உரையே காட்டி விடும்' என்று இதில் கூறியதால் இஃது அதனை அடுத்து வைக்கப்பெற்றது.

க௬ ௪. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. - 194

பொருள்கோள் முறை:

பயன்சாராப் பண்பில் சொல் பல்லார் அகத்து,
நயன்சாரா நன்மையின் நீக்கும்.

பொழிப்புரை: பயனைச் சாராத பண்பில்லாத உரைகளை ஒருவன் பலரிடமும் சொல்லி வருவானானால், (அவ்வுரைகள்) அவர்களின் உள்ளத்தில், நேர்மை உணர்வு படியாமல் செய்து, அவர்களை நன்மை பெறுவதினின்றும் நீக்கிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) பயன் சாராப் பண்பில் சொல் பல்லார் அகத்து :

பயனைச் சாராத பண்பில்லா உரைகளை, ஒருவன் பலரிடமும் சொல்லி வருவானானால் (அவ்வுரைகள்) அவர்களின் உள்ளத்தில்.

பண்பில் சொல் : பண்பில்லாத கீழ்மை உரைகள் - சொல்லும் உரைகளில் பயனும் பண்பும் இருத்தல் வேண்டும் என்று அதிகாரத் தலைப்பொடு பொருத்திக் குறிப்புணர்த்தினார் என்க.

‘அன்பும் அறனும் பண்பும் பயனும்' ஆகும் (45) என்பதை முன்னர்க் கூறினார்.

- பயனில்லாத சொற்களுக்குப் பண்பின்மையும் ஒரு கூறு.

- பயனில்லாதவற்றைக் கூறுபவன் பண்பில்லாமலும் கூறுவான் என்பது கருத்து.

பல்லார் அகத்து : அவ்வுரைகளைப் பலரிடமும் கூறிவருவானானால் அவை அப் பலரின் உள்ளத்திலும்,

- அகத்து - அப்பலரின் உள்ளத்தில்.

- பல்லார் அகத்து - என்பதற்கு மணக்குடவர், பரிமேலழகர், பாவாணர் போலியர், பலரிடத்து என்றே பொருள் கூறுவர்.