பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

61


- என்றார் பிறரும்.

- 'பெரும் பயனில்லாத’ எனவே, பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன - என்பார் பரிமேலழகர்.

- 'தன்பால் கேட்போர்க்குப் பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார்’ என்பார் காலிங்கர்.

3) ‘அரும்பயன் ஆய்தல்’ - என்பது இவ்வுலகின்கண் உள்ள ஒவ்வொரு பொருளும், அதைச் சுட்டும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு பயனை நோக்கியே தோற்றுவிக்கப் பெற்றுள்ளன என்பது மெய்ப்பொருள் கொள்கை என்க. என்னை?

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' - தொல்: 640

'பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்’ - தொல்: 641

- என்றலால், சொல்தோற்றக் காரணமும்,

 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே’ - தொல்: 876

- என்றலால் எதனையும் ஆராய்ந்தறிதல், அறிவு வழிப்பட்ட தென்னும் விளக்கமும்,

‘கண்ணினும் செவியினும் திண்னிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’ - தொல்:1221

- என்றலால், அவ் வறிஞர்களே, எந்தப் பொருளின் தன்மையையும், கண்ணுணர்வாலும், செவியுணர்வாலும், அறிகின்ற நுண்ணுணர்வு பெற்றுள்ளனர் என்பதும், அவர்களே அவற்றை ஆராய்ந்து நன்னயங்களை உணர்தலும், உணர்த்தலும் முடியும் என்பதும், மற்ற பிறர் அவற்றின் உண்மைகளை எண்ணுதற்கும் அரியது, இயலவும் இயலாது என்பதும், இங்குக் கூறப்பெற்றுள்ள தொல்காப்பிய நூற்பாக்களால் அறிந்து கொள்க.

4) 'இனி அரும்பயன் ஆயும்' என்பதற்கு விளக்கம் தருகையில், பரிமேலழகர்.

அறிதற்கரிய பயன்களாவன, வீடுபேறும், மேற்கதிச் செலவும் முதலாயின' என்றதும்,

- காலிங்கர், 'பெறுதற் கருமையுடைய மறுமைப் பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை ஆராயும்' என்றதும், பாவாணர், 'நாள், கோள் இயக்கமும், மெய்ப்பொருளியலும் வீடுபேறும் முதலியன' என்பதும்.