பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106❖பூவை. எஸ். ஆறுமுகம்


அதையும் தம்முடைய கைப்படவே சேர்த்தார். தவசிலியின் பெயரும் விட்டுப் போயிருந்தது. ஒட்டினார்.

ஆனால் அவளுடைய தற்போதைய சரியான விலாசம் தெரியவில்லை. 'தவசீலி'யின் நினைவு காலப்பணி மூட்டத்தைக் கடந்து சென்றது. ஒரு முறை ஆபீசுக்கு வந்திருந்த தவசீலியின் கடிதத்தைப் படித்ததும், அவரது இதயத்தின் இதயம் சந்தோஷப்பட்டதையும், அந்த நிறைவில் அவள் கடிதத்தையே திரும்பப் படித்த விசித்திரத்தையும் அவர் அவ்வளவு லகுவில் மறக்க முடியாதல்லவா? இப்படிப்பட்ட மனச் சலனங்கள் விட்டகுறை-தொட்டகுறையின் விளைவாகக்கூட இருக்க முடியும் என்று ஒருமுறை படித்த மேலைநாட்டுத் தத்துவச் சிந்தனை இப்பொழுது அவரை முயங்கியது! "என்றென்றும் உங்கள் நிழலில் அண்டி ஒண்டும் பெரும் பேற்றினை எனக்கு அருளச் செய்வீர்களா?" என்றபடி தவசீலி எழுதியிருந்த வரிகள் எதிரொலித்தன.

ஒரு நாள்! அலுவலகத்தில் 'அட்வான்ஸ்' கிடைக்காமல், எதிரிலிருந்த கரிக்கடை சாயபுவிடம் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, தவசீலியின் தந்தையைப் பார்த்துவர ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு 'ஆட்டோ'வில் சென்றார். வழியில் சாவுடன் மோத விரும்பி, ஆட்டோவுடன் மோத 'வேண்டுமென்றே' ஓடிவந்த அசல் பிச்சைக்காரன் ஒருவனது உயிரைக் காத்த கடமையும் குறுக்கிட்டது. "என் பசி என் ஒருவன் பசியல்ல, நாற்பது கோடி மக்களின் பசி!” என்று வினோபாஜி கூறினாரே, கண்ணிர் மல்க, அவனைப் பார்த்தார்; கேட்டார்.

"ஏனப்பா நீ இப்படிச் சாகத் துணிந்தாய்?"

"என்னாலே பசி தாள முடியலை ஸார்!"