பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


வேடிக்கையாகப் பேசுவீர்களே? அந்த வாணியை மறந்துவிட்டு, இந்த வாணியின் பேச்சைச் செவிசாய்ப்பீர்களா? நான் ஆடம்பரமில்லாத அழகி என்ற அளவிலும், ஸ்ரீமான் கோதண்டபாணி அவர்களின் அருமைத் திருமகள் என்ற அமைப்பிலும் மட்டுமேதான் தாங்கள் என் சரித்திரத்தை அறிவீர்கள். ஆனால், அதற்குப் பின்னேயும்-அதாவது, அந்தச் சரித்திரத்திற்குச் சரித்திரம் போலவும் சில ரகசியங்கள் மறைந்திருப்பதைத் தாங்கள் அறிந்திருக்க முடியாது. நான் இந்த விந்தை மண்ணில் கண்விழித்தபோது, தாய் தந்தையற்ற அனாதையாகவே கண்விழித்திருக்கிறேன். நெறி பிறழ்ந்த முறையில் கருவில் உருப்பெற்ற என்னை ஈன்று போட்டுவிட்டு அன்னை மறைந்தாள், மறைந்திட்ட அவள் கணவனை நாடி. அனாதைக் குழந்தையான என்னைக் கண்டெடுத்திருக்கிறார் ஒரு தெய்வ மனிதர். அந்த மனிதத் தெய்வம் யார் தெரியுமா? அவரேதான் தவசீலியின் அப்பா. அந் நாளில் பெரிய லட்சாதிபதியாகத் திகழ்ந்த அவர், என்னை அங்கு அலுவல் செய்து கொண்டிருந்த கோதண்டபாணியிடம் ஒப்படைத்திருக்கிறார்! நான் வளர்ந்தேன், என்னுள்ளேஎன்னுடன் வளர்ந்து கொண்டே யிருந்த 'பிறப்புக் கதை'யை அறியாமலே! எல்லா விஷயமும் இப்போது தான், அதாவது, தவசீலி இங்கு வந்து சேர்ந்த சில தினம் முன்னர்தான் எனக்குத் தெரிந்தது. ஸ்ரீமான் - கோதண்டபாணி என் வளர்ப்புத் தந்தைதான் என்ற ரகசியத்தை அறிந்திருந்த எனக்கு என் பிறப்பு விந்தை மட்டும் எப்படியோ தெரியாமலே இருந்து விட்டது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் விட்டகுறை-தொட்ட குறையின் ஊட்டத்தினால்தான் விளையாடுகின்றன.