பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58❖பூவை. எஸ். ஆறுமுகம்


அறையை அடைந்ததும், இருபத்தைந்து காசு பஸ் செலவு மிச்சம் என்பதையும் ஒரு பாக்கெட் பர்க்லி சிகரெட் நஷ்டம் என்பதையும் உணர்ந்தவராக, குளிர் நீரில் ஒரு குவளை எடுத்துக் குடித்துவிட்டு, மொட்டை மாடியில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தார் ஞான சீலன்.

மல்லிகேஸ்வரர் ஆலயம் தெரிந்தது.

மண் துலங்கச் சிரித்த விண்மீன்கள் தெரிந்தன.

உடலுக்குரித்தான சுதந்திரம் கட்டு அவிழ்த்துப் புறப்பட்ட உரிமையுடன் அவர் மனம் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்தது.

போராட்டம் என்றால், உரிமைப் போராட்டம்! உறவுப் போராட்டம்.

ஒருபுறம் தவசீலி!

அதோ கமலாட்சி!

இதோ, புஷ்பவல்லி!

அங்கே வாணி !

ஊருக்குப் புறப்பட்ட தருணத்தில் வாணியிடம் 'விடை’ சொல்லி விடை வாங்கிக் கொண்டு புறப்பட வேண்டுமென்று ஞானசீலனின் அபிலாஷை.

வாணியின் பேசும் விழிகளுடன் பேசத் துடித்த அவரது விழிகள் பூத்துப் போன பின், குடம் ஏந்தி, குவளை மலர்கள் இணையில் மாரன்-சீதனம் தந்த நாணக்குடம் ஏந்தி, அடி பதித்து, அடி பிரித்து வழி நடந்து வந்து சேர்ந்தாள்.

யார்?

வாணி !

"போய் வருகிறேன்!”