பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

39


எனவரும் பழம்பாடலாகும். அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவம், அங்கம் என்பன முதலானவை மேற்குறித்த நாடுகளின் மறுபெயர்களும் அவற்றின் பிரிவுகளுமாக அடங்கும் என்பர். அண்டமுதலான்-அண்டங்கள் அனைத்தையும் படைத்து அளித்து ஒடுக்கவல்ல முதல்வனாகிய இறைவன். ஆறு-வழி. மக்கள் பேசும் மொழிகளில் அவர்கள் எளிதின் உணர்ந்து மேற்கொள்ளத் தக்கவாறு இறைவன் அருளிச்செய்த அருள் நூல்களே ஆகமங்கள் என்பது இத்திருமந்திரத்தாற் புலனாம். ‘ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க’ என்பது திருவாசகம்.


13. சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆகமம் எங்கள் நந்திபெற் றானே.

இறைவன் அருளிய சிவாகமங்கள் உபதேச முறையில் தமக்குக் கிடைத்த வழியினைத் திருமூலநாயனர் இத்திருமந்திரத்தால் உணர்த்துகின்றார்.

(இ-ள்) சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் (சத்தியிடமிருந்து) சதாசிவரும் (சதாசிவரிடமிருந்து) உயர்ச்சியுடைய முதல்வராகிய மகேசரும் (மகேசரிடமிருந்து) உருத்திர தேவரும் (உருத்திர தேவரிடமிருந்து) தவச் சிறப்புடைய திருமாலும் பிரமதேவரும் உருத்திரரும் இம்முறையே தங்களுக்குள்ளே தாம் (உபதேச வாயிலாகப்) பெற்ற ஒன்பது ஆகமங்களையும் எம்முடைய குருநாதராகிய நந்திதேவர் ஒருங்கே பெற்றார். எ-று.

சிவமாம் பரம்-சிவமாகிய பரம்பொருள். பரத்தினின் - பரம்பொருளிடமிருந்து; இன்-ஐந்தாம் வேற்றுமை யுருபு. உவமம் ஆம் மகேசர் என்க. உவமம்-உயர்ச்சி. நவ ஆகமம்-ஒன்பது ஆகமங்கள். நவம்-ஒன்பது.