பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

71


உயிர் நீங்கிய யாக்கையினை நன்முறையில் அடக்கஞ் செய்யாமல் இகழினும் அன்றி முறைப்படி அடக்கஞ் செய்து போற்றினும் அதனால் அதனைப் பிரிந்து சென்ற உயிர்க்கு அழிவோ ஆக்கமோ எதுவும் இல்லை என்பதாம். தொழில் அறச் செய்து-வினைகளை மிகுதியாகச் செய்து. ஊட்டுதல் - உணவினாற் பேணிக்காத்தல். கூத்தன் என்றது ஆன்மாவை . ஆடுங் கூத்தர்போன்று பிறவிகள் தோறும் வேறு வேறு கோலங்களுடன் தோன்றுதல் பற்றி ஆன்மாவைக் கூத்தன் என்றார்,

ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்தி னொருங்கு நின்றியலாது
செய்வினை வழித்தாய் உயிர் செலும்
                                    (சிலப்-உஅ. 165-167)

என இளங்கோவடிகளும் உயிர்களைக் கூத்தர்களாகக் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். ‘பார்த்துழிப் பெய்யிலென்’ என்றும் ‘தொழிலறச் செய்தீட்டும்’ என்றும் பாடங்கொண்டு அதற்கேற்ப உரை கூறுதலும் உண்டு. இம்மந்திரத்தை யடியொற்றியது,

‘நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்’ (யாக்கை நிலையாமை.-6)

எனவரும் நாலடியார் செய்யுளாகும்.

செல்வம் நிலையாமை

36. தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போமுட லொக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டு கொளீரே.