பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 ❖

திரும்பி வந்த மான் குட்டிசிறுவன் சிறிது நேரம் கெஞ்சிப் பார்த்தான். அவர் மனம் இளகவில்லை. சிறுவனுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க மனமில்லை. காலதாமதம் ஆகக் கூடாதே என்று மூன்றாவது தெருவுக்கு ஓடினான்.

இதற்குள் தீப்பிடித்த வீட்டிலிருந்து நெருப்பு வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அந்த வரிசையிலிருந்த நான்கைந்து வீடுகளிலும் நெருப்புப் பற்றிக் கொண்டது. அந்த வீடுகளிலிருந்தவர்களெல்லாம் ‘குய்யோ முறையோ’ என்று கத்திக் கொண்டு, குழந்தைகளையும் முக்கியமான சாமான்களையும் தூக்கிக் கொண்டு வெளியேறினார்கள். நெருப்பணைக்கும் படை வராததனால் அவர்களே கிணற்றிலிருந்தும், குழாயிலிருந்தும் குடம் குடமாகத் தண்ணீரை எடுத்துவந்து நெருப்பை அணைக்க முயன்றார்கள். நிலைமை முற்றிவிட்டதால், சுலபமாக அணைக்க முடியவில்லை.

அதேசமயம், கார்த்திகேயரது வீட்டின் பின்பகுதி யிலிருந்து “ஐயோ, தீ தீ!” என்ற அலறல் கேட்டது. கார்த்திகேயர் திடுக்கிட்டு எழுந்தார். பின்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி, மக்கள், வேலைக்காரர்கள் எல்லாரும் ஓடி வருவது கண்டு “என்ன? தீயா” என்று திகிலுடன் கேட்டார்.