பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞர்களின் பாராட்டு


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:

பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்

பாடிப் பாடி மகிழ்வெய்த

தெள்ளித் தெளித்த செந்தமிழில்

தேனார் கவிகள் செய்துதரும்

வள்ளியப்பா...

கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு:

பிள்ளைக் கலிதீர்க்க வந்ததெல்லாம்-நம்

பிள்ளைக ளாகவே வாழுதற்கு

வள்ளியப் பாஇன்று பாடிவைத்த-காந்தி

வள்ளல் கதைஒரு வாய்க்காலாம்

ராஜாஜி:

வேறு யாரும் செய்யாத பணி. அந்தப் பணிக்குச் சரியாய் அமைந்தவர், செய்து மேலிடத்துப் பாராட்டுப் பெற்றது வியப்பும் மகிழ்ச்சியும். மேன்மேலும் தமிழ்க் குழந்தைகளுக்காக வள்ளியப்பா உழைப்பாராக! அந்த உழைப்புக்குத் தர வேண்டிய ஊக்கத்தை அனைவரும் தருவோமாக!

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை:

இனிய தமிழ்ப் பாட்டால் உள்ளத்தை அள்ளும் கவித்திறம் வாய்ந்தவர் திரு. வள்ளியப்பா. பிஞ்சு மனத்திற்கு உகந்த செஞ்சொற் கவிஞர் அவர்.

டாக்டர் மு. வரதராசனார்:

நல்ல கற்பனையும், சிறந்த உணர்ச்சிகளும், உயர்ந்த நோக்கங்களும் குழந்தைகள் மனத்தில் பதியுமாறு பல பாடல்களைப் பாடித் தந்துள்ளார் குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா.

தி. ஜ. ர:

குழந்தை இலக்கியம் பற்றிய யோசனை தமிழகத்தில் எங்கே நடந்தாலும், உடனே வள்ளியப்பாவைத்தான் எவருக்கும் முதன் முதல் ஞாபகம் வரும். குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக ஒரு பெரிய இயக்கத்தையே தோற்றுவித்தவர், குழந்தைக் கவிஞர்.