பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்துகின்றான். இச்செயல், தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாகிய பண்ணனது ஈகைத் திறத்தையும், அவன் செய்யும் அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளமுருகிய வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவனது விரிந்த உள்ளத்தின் உயர்வையும் நன்கு தெளிவிப்ப தாகும்.

நுகர்தற்குரிய இனிய உணவுகளைப் பெற்ற பொழுது 'அவற்றை யாமே தனித்து உண்போம், எம்மிடத்துக் கொண்டு வந்து தருக' என்று உணவுப் பொருள்களிலே விருப்பமுடையோர் கூறுவர். அங்ஙனம் கூறும் தன்னலத்தினைத் துறந்த தூய நெஞ்சம் உடையவர்களே தம்மிட முள்ள பொருளைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் ஆண்மையுடையவராவர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெற்றியினையுடைய இப்பெருமக்களே பிறர்க்குப் பகுத்துண்ணுதலாகிய அறத்தால் நாட்டு மக்களது பசிப்பிணியை நீக்க வல்ல பேராண்மை படைத்தவராவர். காப்பியாற்றுக் காப்பியனாரென்னும் புலவர், களங்காய்க்கண்ணி நார் முடிச் சேரல் என்னும் வேந்தர் பெருமானை நோக்கி,

உலகத்தோரே பலர் மற் செல்வர்
எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப்
பகுத் தூண் டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே.