பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


'சென்றடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே, அதனை யடையும் வழிகள் ஆறு உள்ளன, என்றாற் போன்று, அறுவகைச் சமயங்களும், முழுமுதற் பொருள் ஒன்றையே யடைவதற்குச் சாதனமாக உள்ளன. அவ்வாறாகவும் யாம் கூறும் இதுவே நன்று; பிறர் கூறும் அது தீது என்று சொல்லித் தம்முட் பிணங்கி வாதிடும் சமய வாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்து ஒடும் இழிந்த நாயினை ஒத்தவராவர்' என்பது இதன் பொருள், எல்லாச் சமயங்களும் மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அறிஞர்களால் வகுத்துரைக்கப் பட்டன என்றும், அவற்றிடையே அமைந்த ஒருமை யுனர்வினைக் காணமுயலாது அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்துவார். 'குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே' எனறார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்குள' என்றார்.

சுத்த வடிவியல்பாக வுடைய சோதி
சொல்லிய ஆகமங்க ளெல்லாம் சூழப்போயும்
ஒத்து முடியும் கூட ஓரிடத்தே
ஒருபதிக்குப் பல நெறிகள் உளவானாற்போல்