பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186


இறைவன் உலகுயிர்கள் உய்யும் வண்ணம் ஒரு பெரும் தனிக்கூத்து இயற்றியருள்கின்றான், என மெய்ந்நூல்கள் கூறுகின்றன. மெய்யுணர்விற்குப் புலனாகும் சிவபோகமாகிய பேரின்பத்தை அன்புடைய அடியார்கள் தம் ஐம்பொறி அளவாலும் எளிதிற் பெற்று இன்புறும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் பேரொளிப் பிழம்பாய் நின்று ஆடல் புரிகின்றான். இவ்வெட்ட வெளியில் நிகழும் இறைவனது திருக்கூத்தினை ஆளுடைய பிள்ளையார் கண்டு வணங்கி மகிழ்ந்த திறத்தினை,

அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே
யான அம்பல முந்தம்
உண்ணிறைந்த ஞானத் தெழுமானந்த
ஒருபெருந் தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டெழும்
களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணியக் கொழுந்தனையவர் போற்றுவார்
புனிதராடிய பொற்பு

(பெரியபுராணம் திருஞான-160)

உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை
ஒழிவின்றி உறவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
அருளினை எனப் போற்றி
இனணயில் வண் பெருங் கருணையே ஏத்திமுன்
எடுத்த சொற் பதிகத்தில்
புணரு மின்னிசை பாடினர் ஆடினர்
பொழிந்தனர் விழிமாரி.

(௸ 161)

எனவும்.