பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


செய்த தென்திசை வாழவும் மக்கள் படும் எல்லாக் கேட்டிற்கும் காரணமாய் யான், எனது, என்னும் ஆணவத்தின் விளைவாய் இந்நாட்டில் வேரூன்றிய தீமையாகிய சாதிவேற்றுமை யொழியத் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை அருளிச் செய்யவும் இறைவன் திருவருளால் திருக்கயிலாயத்தினின்றும், தமிழகத்தில் திருவவதாரம் செய்தவர் நம்பியாரூரர் ஆவர். இவ் வுண்மையினை,

மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவார்.

(பெரிய-திருமலைச்-25)

எனவரும் பாடலில் சேக்கிழாரடிகள் குறிப்பிட்டுள்ளமை காணலாம். ஆணவத்தின் விளைவாகிய சாதி வேறுபாட்டினால் வரும் தீமையை இல்லையாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்த செந்தமிழ்ப் பதிகம் சுந்தரர் பாடிய இத் திருத்தொண்டத் தொகை என்பதனை அறிவுறுத்துவது, 'தீதிலாத் திருத் தொண்டத் தொகை' யென்னும் சேக்கிழார் வாய்மொழியாகும்.

மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியர் குலத்துள் தோன்றிய நம்பியாரூரர், திருவெண்ணெய் நல்லூர்ச் சபையிலே இவன் என் அடியான் என இறைவனால் ஆளோலையினைக் காட்டி வழக்குரைத்து அடிமை கொண்ட செய்தியினைத் தாம் பாடிய திருப்பதிகங்களிற் பலவிடங்களிலும் நெஞ்சம் நெகிழ்ந்துருகிப் போற்றியுள்ளார். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று அம் முதல்வனுக்குத் தாம் தொண்டுபட்ட உரிமைத்திறமாகிய சாதனத்தின் பயனாகத் தாம் பெற்ற பெரும் பயனே அடியார்க்கடியன் ஆகிய தன்மை என்பதனை,