பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தாதான்மிய சம்பந்தத்தால் நீக்கமின்றி எங்கும் விரிந்து நிற்பன் என்பதனை ”எந்த எந்தப் பொருள் யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டிற்கும் பொதுமையில் நிற்கும்; தன் எல்லையளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக் கதிரொடு நீக்கமின்றி நிற்றல் போலும்” என்னும் ஏதுவால் வலியுறுத்துவார் சிவஞான முனிவர். இங்ஙனம் இறைவன் தானும் சத்தியும் என இருதிறப்பட்டுத் தனது ஆணையாகிய சிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது ”ஆதிபகவன்” என்னும் இத்திருப்பெயர் என்பதும், இது மாதொரு கூறராகிய அம்மையப்பரைத் குறித்த பெயரென்பதும் இங்கு மனங்கொளத்தக்கன.

அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் -அம்மையப்பர்
எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்

(திருக்களிற்றுப் படியார் 1)

எனவரும் பாடல் "ஆதிபகவன்" என்னும் திருக்குறள் தொடரோடு ஒப்பவைத்துச் சிந்தித்து உணர்தற்குரியதாகும்.

அம்மையப்பராகிய இறைவர் தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக் கலந்து ஐந்தொழில் நிகழ்த்தி யருளுதலாகிய பொது வியல்பும் இவ்வாறு உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றி இவை யெல்லாவற்றையுங் கடந்து சிந்தனைக்கரிய சிவமாகித்