பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


இதன் கண், இந்நாட்டில் இதுவரை தோன்றி வளர்ந்துள்ள சமயங்களின் தெய்வப் பெயர்களும், இனிப் புதுவதாகத் தோன்ற விருக்கும் சமயங்களின் தெய்வப் பெயர்களும், இந்நாட்டில் முன் இல்லாதனவாய்ப் பின் வந்து புகுந்த சமயங்களின் தெய்வப் பெயர்களும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனையே குறிக்கும் எனவும், பித்தன் என்ற பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்டபெருமான் பிறசமயப் பெயர்களையும் வெறுக்காது ஏற்றுக் கொள்வான் எனவும் சுவைபடக்கூறும் நிலையில் அமைந்தது,

'பிற்சமயத்தோர் பெயரும் அவர் பெயரேகண்டாய்
பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ'

என்ற தொடராகும்.

ஒன்றாய்ப் பலவாய் உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன் ஞானமயமாகிய பெருவெளியிலே திருவருட்பேரொளி வடிவாய் எல்லார்க்கும் பொதுவாய் நடம் புரிந்தருள்கின்றான், என்னும் பேருண்மையை அறிவுறுத்தும் நிலையில் அமைந்ததே தில்லைச் சிற்றம்பலத் திருக்கோயிலாகும். எல்லாம் வல்ல இறைவன் சமயங்கடந்த தனி முதற் பொருளாய் எல்லா வுயிர்களும் உய்திபெறும் முறையில் இம்மன்றத்திலே அருட்கூத்து இயற்றுகின்றான் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். பல்வேறு சமயங்களையும் கடைப்பிடித் தொழுகுகின்ற எல்லா மக்களும் தம்மிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” எனத் திருமூலர் அறிவுறுத்திய பொதுமை நிலையில் நின்று இறைவனை வழிபடும் முறையில் அமைந்ததே இத்தில்லையம்பலமாகிய பொதுமன்றமாகும். இவ்வாறு எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு சமயங்கடந்த