இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௨
ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்தி செய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். (ஆ)
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்க ளெல்லாம் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். (ஆ)
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்ப ருளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன் விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்த பொற் பாதம். (ஆ)
நல்லவ ரெல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்.(ஆ)