பக்கம்:திருவாசகத்தேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மனித இனத்திற்குக் குறிக்கோள் இருக்கிறதா? இன்றைய மனிதன் சாதனைகளையே குறிக்கோள்கள்—— இலட்சியங்கள் என்று சொல்கிறான். இன்றைய மனிதனிடம் 'மனிதம்' இல்லை; கடின சித்தம் குடிகொண்டு விட்டது. இந்த மனித குலத்துக்கு முதலில் அழக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐயா, ஐயா இது என்ன புதிய முயற்சி! இன்று மக்கள் அதிகமாக அழுகிறார்கள்! விலைவாசி ஏற்றம், குடும்பப் பொறுப்பு, மகள் திருமணம் எல்லாமே இன்று அழுகைக்குரிய நிகழ்வுகளாகி விட்டன. இந்த அழுகை போதாதா? இன்னும் என்ன அழுகை? எதற்கு அழுகை? என்று நினைக்கலாம். இப்பொழுது மனிதனின் தேவைகள் எளிதாகக் கிடைக்கும். தேவை ஒரு நல்ல அரசு. அதற்கு மேலும் நன்றென ஒன்றுண்டு அதுவும். கிடைக்கும்! இன்பத்துள் இன்பமும் கிடைக்கும்!

மனிதனின் நெஞ்சக்கனகல்லை நெகிழ்ந்து உருகச் செய்ய வேண்டும். உருகும் மனிதனிடத்தில் உணர்வு சிறக்கும்; ஞானம் முகிழ்க்கும். மனிதன் கடவுளை நினைந்து நினைந்து உருகி அழுதானானால் உருப்பட்டு, விடுவான். மனிதன் கடவுளை நினைந்து அழக் கற்றுக் கொள்ளவில்லையே; என்று இடித்துக் கூறுகிறது திருவாசகம்! அழுதால் இறைவனை—— இறைவன் அருளைப் பெறலாம்! இது திண்ணம்! திருவருள் முதல் எண் முதல் எண்ணை வெற்றிகரமாகப் போட்டுவிட்டால் மற்ற எண்கள் தாமே வரும்.

மனித வாழ்வுக்கு உணவு தேவை; மருந்தும் தேவை. உணவாகவும் மருந்தாகவும் ஒருசேரப் பயன்படுவது தேன்! தேன் உணவு! தேன் மருந்து! ஏழைகளுக்குத் தேன் மருந்து. வளமுடையோருக்கு உணவு. தேன், தேனீக்களால் சேகரிக்கப் பெறுவது, தேனிக்கன் சுறுசுறுப் பானவை. கட்டுப்பாடுடையவை; ஒழுங்குகள் உடையவை. ஒரே தொழில் செய்பவை. தேனீக்கள் பலகாத தூரம் சென்றாலும் தேன் உள்ள மலர்களை