பக்கம்:திருவாசகத்தேன்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 129

குறைவும் இல்லை. அப்படியிருந்தும் சபையில் விசாரசருமரின் தந்தையை அழைத்து, விசாரசருமரின் அடாத செயல் பற்றிக் கூறினர். விசாரசருமரின் தந்தை எச்சதத்தர் தவறு நிகழ்ந்திருக்காது என்றும் அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் உறுதி கூறினார்.

மறுநாள் விசாரசருமர் வழக்கம்போல் பூசையில் அமர்ந்தார்; பூசை செய்தார். தம்முன் எழுந்தருளியிருந்த இறைவனுக்குப் பால் முழுக்காட்டினார். இச்செயலை, ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தர்விசாரசருமரின் தந்தை வெகுண்டு தடித்த கோலினால் விசாரசருமரை அடித்தார். விசாரசருமரின் சிவயோகம் கலையவில்லை. எச்சதத்தர் தீராத வெகுளியால் பால் முழுக்காட்டுக்கு என்று வைத்திருந்த பாற்குடத்தைத் தனது காலால் இடறி விடுகிறார். விசாரசருமரின் சிவயோகம் கலைகிறது. சிவ பூசைக்கு உற்ற இடர்ப்பாட்டைச் சடுதியில் உணர்கிறார். பாற்குடத்தை உதைத்த கால்களை வெட்டி விடுகிறார். எச்சதத்தர் கால்களை இழந்து வீழ்ந்தார். சிவபெருமான் அம்மையப்பராக எழுந்தருளிக் காட்சி தந்தருளி தாம் உண்பனவும் உடுப்பனவும் பெறும் சண்டேசுவரர் என்றும் பதந்தந்தருளினார்.

இந்த வரலாறு தரும் படிப்பினைகள் பலப்பல. முரண்பாடுகளும் உடைய வரலாறு இது.

பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற பாடம் மிக மிக முக்கியம். பசு இந்த நாட்டின் செல்வம். பசுக்களை முறையாக வளர்க்க வேண்டும். பசும்புல் மேயவிடுதல், நறுநீர் குடிக்கத் தருதல், குளிர் நிழலில் படுத்து இழைப்பாறச் செய்தல் ஆகியன பசுப் பாதுகாப்புக்கு முக்கியம். இத்தகைய ஏற்பாடுகள் இன்று நமது நாட்டில் இல்லை. நாம் பசுக்களை வணங்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர, வளர்க்கக் கற்றுக்

தி-9