பக்கம்:திருவாசகத்தேன்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 5

நெஞ்சை உருக்குகிறது. ஆதலாலும் உருக்கும் தன்மைமிக்குடையதாக விளங்குகிறது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டார். "கண்ணால் யானும் கண்டேன் காண்க" என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்கிறார். அது மட்டுமல்ல. கடவுட் காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணரில் மாணிக்கவாசகர் கடவுட் காட்சியில் திளைத்தவர் என்பது உறுதி.

        வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்(று)அ
            னேகன் ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்(று)அங்(கு)
        எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
            எய்துமா(று) அறியாத எந்தாய் உன்றன்
        வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி
            மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
        திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
            எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே

(திருச்சதகம்- 25)

என்னும் திரு வாசகத்தால் இதனை அறியலாம்.

மனிதக்காட்சிக்கும், கடவுட்காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மனிதக்காட்சியில் நெடுந் தொலைவில் உருவமும், அண்மைத் துாரத்தில் உறுப்பும், மிகமிக அண்மையில் வண்ணமும் (நிறமும்) காட்சிக்குப் புலனாகும். கடவுட்காட்சியில் தொலைவில் வண்ணமும் அண்மையில் உருவமும் மிகமிக அண்மையில் உறுப்பும் திருவடியும் காட்சிக்குப் புலனாகும். இந்த மரபு இந்த பாடலில் விளக்கப்பெற்றுள்ளது. அதனால் இறைவனை அண்ணித்து- ஒன்றித்து அனுபவித்த அடியார்கள், திருவடிகளையே போற்றுகிறார்கள்.

இங்கனம் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் "இரு" என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப்