பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 327 அந்த அனுபவத்தை மீண்டும் ஒவ்வொன்றாக நினைந்து சொற்களாக வெளிப்படுத்தும் வாய்ப்பைக் குருநாதர் அருள்செய்கின்றார். அடிகளார் பெற்ற இறை அனுபவம் ஆகிய ஆனந்தம் மூன்று நிலைகளாகப் பிரித்துப் பேசப்பெறுகின்றது. முதல் நிலை 'வாக்கு இறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் தேக்கிடச் செய்தனன் (திருவாச 3-170-17) என்பதாகும். தாம் பெற்ற அனுபவத்தை அமுதம் என்று அடிகளார் கூறுகின்றார். சிறந்த ஒன்றை அமுதம் என்று சொல்வது இந்நாட்டு இலக்கிய மரபாகும். இங்கு அனுபவத்தை அமுது என்றது மரபுபற்றி அன்று. தேவர்கள் உண்ட அமுதத்தைப் பெயரளவில் நாம் அறிவோமே தவிர அதன் இயல்பு முதலியவற்றை அவர்கள்மட்டுமே அறிவர். அதேபோல, அடிகளார் பெற்ற இறை அனுபவம் ஆகிய அமுதத்தை இறை அனுபவம் என்ற பெயரளவில் நாம் அறிவோமே தவிர, அதன் இயல்பு முதலியவற்றை அனுபவித்த அடிகளார் ஒருவரே அறிவார். தேவர்கள் உண்ட அமுதத்தைப்பற்றியும், அது கிடைத்த வரலாறு, தேவர்கள் உண்ட வரலாறு என்பவைபற்றியும், புராணங்கள் இன்றயளவும் பேசுகின்றன. ஆனால், அடிகளார் பெற்ற அனுபவத்தைச் சொற்களால் கூறமுடியாது என்பதை வாக்கிறந்த அமுதம் என்றார். அமுதமே ஆயினும் உண்டுவிட்டால் பின்னர் அது வெளியேறுவது உறுதி. ஆனால், அடிகளார் உண்ட இறையனுபவம் ஆகிய அமுதம் 'மயிர்க்கால்தொறும் தேங்கி நின்றுவிட்டது என்கிறார். உண்ட ஒன்று வயிற்றளவில் நின்று சீரணிக்கப்பட்டு குருதியோடு கலக்கும். அது எங்கும் தேங்கிவிடுவது இல்லை. அடிகளார் பெற்ற அமுதம் உடல் முழுவதும் நிறைந்து மயிர்க்கால்தொறும் தேங்கிநின்றது என்று அவரே. கூறுகின்றார். அப்படியானால் இதன் பொருள் என்ன? உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை மயிர்க்கால்