பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 103


இவ்வாறு கூறியதால் அருளைக் குறை கூறுவதாக நினைத்துவிடக் கூடாது. அருள் ஈடிணையற்றதாக இருப்பினும் அதனைப் பெறுபவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவராக இருந்துவிடின் அருளும் செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டுவிடும். எனவே, இங்கு அடிகளார். இந்த அருளாகிய உபாயம் என்னிடையும் நின்னிடையும் என்ன பயனைத் தந்தது என்ற முறையில் சிந்திக்கின்றார். அந்த அருள் பயன்பட வேண்டுமேயானால் அருளைப் பெறுபவரிடம் உள்ளன்பு நிறைந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்துவிட்டார். ஆதலின் மூன்றாம், நான்காம் அடிகளில் அந்த அன்பு இறைவனுடைய திருவடியிடத்து வேண்டும் என்று பேசுகிறார்.

அன்பு, இறைவன் திருவடிக்கண் செலுத்தப்பட வேண்டுமேயானால் அதற்கும் அவன் அருள வேண்டும். ஆதலால் ‘அன்பு நின் கழற்கணே புணர்ப்பதாக' என்று வேண்டுகிறார்.

76.

போகம் வேண்டி வேண்டிலேன்
       புரந்தர ஆதி இன்பமும்
ஏக நின் கழல் இணை அலாது
      இலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து
      குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என் கை கண்கள் தாரை
       ஆறு அது ஆக ஐயனே 72

புரந்தரன்-இந்திரன். ஆகம்-உடல். குஞ்சி-முடி. தாரை ஆறதாக-கண்ணீரே இடைவிடாத நீர்ப்பெருக்குடைய ஆறாக. கம்பம்-நடுக்கம்.

‘ஐயனே! இந்திரர் முதலியோரின் பதங்கள் கிடைப்பினும் அந்த நுகர்ச்சியை நான் வேண்டவில்லை.