பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சொற்களுக்கும் மனம்போன போக்கில் விருப்பமானவற்றைச் செய்து என்று பொருள் கூறினால், அது பொருந்தாது. அடுத்து வருகின்ற 'கருணை மட்டுப் பருகிக் களித்து' என்ற தொடரின் பின்னர், 'கண்டது செய்து' என்ற சொற்களைச் சேர்த்துப்பார்த்தால் உண்மைப் பொருள் விளங்கும்.

கருணை மட்டுப் (தேன்) பருகியது எங்கே? பருகியதால் நெஞ்சம் களித்தது எங்கே மிண்டுகின்ற நிலை வந்தது எங்கே? இவையெல்லாம் ஒரே நேரத்தில் திருப்பெருந்துறையில் குருவின் திருவடி தீட்சை பெற்றபிறகு கிடைத்த அனுபவங்கள் அல்லவா? எனவே, பாடலைப் பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்து பொருள் காண்பது நலம.

‘கருணை மட்டுப் பருகிக் களித்து, கண்டது செய்து மிண்டுகின்றேனை' என்று இயைத்துக் கொள்க. இங்கே வரும் கண்டது செய்து என்ற தொடருக்கு, ‘என்னுடைய எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் அப்பாற்பட்டவற்றை, ஏன் செய்கிறோம் என்று தெரியாதவற்றைச் செய்து' என்று பொருள்கொள்ள வேண்டும். அதாவது தேகப்பிரக்ஞை அற்று, தற்போதம் இழந்த நிலையில் செய்த செயல்களையே இங்கே குறிப்பிடுகின்றார். கண்டது என்ற சொல்லின் முன்னர் இறையனுபவத்தில் என்றதைச் சேர்த்துக்கொண்டால் பொருள் எளிதாக விளங்கும்.

இந்தக் கருத்துப் பின்னரும்,

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ

(திருவாச. 502)