பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வாய் ஓவாள்-வாய் ஒழியாமல் பேசுவாள். ஒவா-இடைவிடாத தாரை-நீர்த்துளி. பார் ஒருகால் வந்தனையாள்-பூமியின்கண் ஒரே முறையாக விழுந்து வணங்குதலையுடையவள். வார்-கச்சு. ஏர்-எழுச்சி.

இப்பாடலில் கூறப்பெறும் செய்திகள் அந்த நங்கையர் கூட்டத்தில் யாரோ ஒருத்திக்கு நிகழ்ந்த இறையனுபவத்தை விளக்கிக் கூறுவதாகும். என்றோ ஒருநாள் நடந்த அந்நிகழ்ச்சியைக் கண்ட ஒருத்தி, அச்செய்தியைத் தன் தோழிமாருடன் இன்று பகிர்ந்துகொள்கிறாள். பாடலின் சரிபாதி தோழிக்கு நிகழ்ந்தவற்றைக் கூறுவதாயினும் பாடலின் உயிர்நாடிப் பகுதி இது அன்று.

நம்முள் ஒருத்தியாக உலக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருத்தியை, ஒரு விநாடியில், பெருமாற்றம் செய்தான்; அவளுடைய பொறி, புலன்களையும் மடை மாற்றம் செய்தான்; அவள் தன்னை மறந்து, தன் நாமம் கெட்டுப் பித்தியானாள் என்றால், இம்மாபெரும் மாற்றத்தைச் செய்யக்கூடியவன் எத்தகையவன்? அத்தகையவனைப் பாடவேண்டும் என்று கூறும் பின் அடிகளே பாடலின் உயிர்நாடியாகும்.

இதிலுள்ள சிறப்பைச் சற்றுச் சிந்தித்தல் வேண்டும். இளமை பொருந்திய ஒருத்திக்கு, எத்தனையோ கற்பனைகளுடன் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பமாக வாழலாம் என்று கனவுலகில் சஞ்சரிக்கும் ஒருத்திக்கு, இம்மாற்றம் வருகிறது. தொடர்ந்து பல பிறவிகள் எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் பல பயிற்சிகளைச் செய்து, இறுதியாகப் பெறவேண்டிய மாற்றமாகும் இது. அந்த மாற்றம் இப்பிறவியிலே இந்த இளம் வயதிலேயே இவளுக்கு வந்தது என்றால், இவளெடுத்த முற்பிறவிகளின் பயனாக, அப்பிறவிகளில் மேற்கொண்ட தவப்பயனாக, இந்நிலை வந்தது என்று தோழிகள் நம்பத் தயாராக இல்லை. இம்மாற்றம் இவளுடைய ஆற்றலால் வந்ததன்று.