பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இவர்கள் அறிந்தார்கள் என்று ஐயுறுவார்க்கு, அவர்களே இதோ விடை கூறுகின்றனர்.

உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு நிலையான உணர்வு தோன்றினாலொழிய, கண்ணில் வழியும் நெடுந்தாரை ஓவா நெடுந்தாரையாக இராது. மனம் முதலியவற்றில் தோன்றும் உணர்வு காரணமாகக் கண்ணீர் பெருகினால், அது விட்டு விட்டுப் பெருகுமே தவிர ஓவா நெடுந்தாரையாக இராது. ஆனால், இவளைப் பொறுத்தமட்டில் 'நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண் பனி'க்கின்றது. ஆதலாலும், எம்பெருமான் சீரை விடாமல் பேசிக்கொண்டே இருத்தலாலும், இந்தப் புறச் செயல்களைக் கண்டு, இவள் சித்தம் களி கூர்ந்து உள்ளது என்பதை உறுதி செய்தனர்.

இவ்வாறு உறுதி செய்துகொண்ட பின்னர் அந்தத் தோழியர்கள் இவளை மீண்டும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

இப்பெண், மண்ணில் வீழ்ந்து வணங்கியபடியே கிடக்கின்றாள். இளம்பெண் ஆகிய இவள், இந்திரன் முதலிய பல சிறு தெய்வங்கள்பற்றியும் அறிந்திருப்பாளோ? தன் வாழ்வு சிறக்கவேண்டும் என்பதற்காக வேதம் கூறுகின்ற முறையில் இந்திரன் முதலிய தெய்வங்களை வழிபடுபவளோ என்று நினைத்தால், இல்லை இல்லை என்கிறார்கள் தோழிமார்கள். எங்கள் தலைவி ‘விண்ணோரைத் தான் பணியாள்’ என்று அறுதியாகக் கூறுகின்றார்கள்.

விண்ணோரைப் பணியாள் என்று கூறியிருந்தாலே போதுமே! 'தான் பணியாள்’ என்று அதிகப்படியாகக் கூறவேண்டிய காரணம் என்ன? 'தான்மட்டு மல்ல, அவளோடு சேர்ந்த எங்களையும்கூடச் சிறு தெய்வங்களைப் பணிய விடமாட்டாள்' என்ற பொருள், ‘தான்’ என்ற சொல்லில் தொக்கி நிற்கின்றது.