பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அன்னையும் உயிர்களைப் புரக்கின்றாள் ஆதலின், இந்த உவமையில் இறைவியையே உவமைப் பொருளாகக் கொள்கிறார். பல உவம உருபுகளைப் பெற்று, மேகமும் மழையும் அன்னையோடு உவமிக்கப்பட்டாலும், இதனை உருவகமாகக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. என்ன என்ற உவமை உருபு மும்முறை பயன்படுத்தப்பெறினும் உருவகம் என்றே கொள்வதில் தவறில்லை.

வெள்ளை மேகம் கடல் நீரை முகந்துகொண்டு மேலே எழும்பி, அன்னையைப்போல நீல நிறம் பெற்று, அன்னையின் இடையைப்போல மின்னி, திருவடிச் சிலம்பைப்போல இடித்து முழக்கி, அவள் திருப் புருவத்தைப்போல வானவில்லை உண்டாக்கி, கண்ணுக்குப் புலப்படாமல் நமக்குக் கிடைக்கும் அவள் அருளைப் போல, கண்ணுக் தெரியும்படியாகவே அவள் அருள் போன்ற மழை பொழிவதாக! என்பதாம்.

திருவெம்பாவையின் முதல் பாடல்கள் ஒருவரை ஒருவர் எழுப்புவதாகவே அமைந்துள்ளன. அதனை அடுத்து வரும் பாடல்களில் அப்பெண்கள் தம் வாழ்க்கை வளம் பெறத் தேவையான கணவன், குழந்தைகள் என்பவர்களைப்பற்றி பேசினர். இதுவரை அவர்கள் ஈடுபாட்டின் அடித்தளத்தில் தம் வாழ்வு, தம்முன்னேற்றம் என்ற தன்னலம் இழையோடி இருப்பதைக் காணமுடிகிறது.

ஈடுபாட்டின் மிகுதியால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலம் மறைந்து, நீராடும் குளத்தை இறைவன் இறைவி வடிவாகக் காணும் வளர்ச்சி வந்தது. இந்த வளர்ச்சியின் முடிவில் எங்கும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு உணரக்கூடிய வளர்ச்சி வந்தது. இந்தத் தலையாய உணர்வு ஏற்பட்டவுடன், தாம், தம் வாழ்வு, தன்னலம் என்பவை மங்கத் தொடங்கிவிட்டன. இறைவியின் திருவருள், அவ்வருளை வேண்டி நிற்கும் தங்களை அல்லாமல், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதினர்.