பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஆனால், அடுத்த ஆண்டு பயிர் செய்வதற்கு வண்டல் உரம் வயலுக்கு மிகுதியாகக் கிடைத்துவிடுகிறது.

அதேபோல அன்னையின் அருள் சில சமையங்களில் துன்பத்தைத் தருவது உண்மைதான். நாம் செய்த வினைக்கு ஏற்பத் தரப்பெற்றாலும், துன்பத்தை அனுபவித்து முடிந்த பிறகு மனம் தூய்மை அடைந்து மேல் வளர்ச்சி அடைகிறது. மழையின் அழித்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுபோல, அன்னையின் இன்னருளும் துன்பத்தைத் தந்து பின்னர்த் தூய்மை அடைய உதவுகிறது.

171. செம் கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கரும் குழலி நம் தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிச்
செம் கமலப் பொன் பாதம் தந்தருளும் சேவகனை
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 17

செங்கணவன்-திருமால், கொங்கு-மணம். சேவகன்-வீரன். ஆர் அமுது-நிறைந்த அமுது ; கிடைத்தற்கரிய அமிர்தமுமாம்.

164ஆம் பாட்டில் தொண்டரிடையே வந்து ஒரு தோழனாகவும் காட்சியளித்து. அருள் செய்பவன் இறைவன் என்று குறித்த செய்தியை, விரிவுபடுத்தும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

செங்கண்ணவனாகிய திருமாலும், திசைமுகனாகிய நான்முகனும் தேவர்களும் வேறு எவ்விடத்தோரும் பெறுதற்கு அரியதாகிய இறையின்ப அனுபவத்தை, நம்பாலதாகத் தந்து அருள்கின்ற சேவகன் என்றார்.

இந்த இன்பத்தைத் தருபவன் அவன் என்றாலும், அவனை அடைய விரும்பிய நாம் அவனை நாடிச்சென்று