பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


மரபு தமிழர்களைப் பொறுத்தமட்டில் என்றுமே இருந்துவருகின்ற ஒன்றாகும். உண்மை என்பது ஒரு முனை என்றால், இன்மை என்பது அதன் மறு முனையாகும்.

ஒரு பொருளை உண்டு, இல்லை என்று நாம் கூறுவது கால, தேச, வர்த்தமானங்களுக்கு உட்பட்டே ஆகும். அறிவு ஒன்றால்மட்டுந்தான் இந்த வேறுபாட்டை, முரண்பாட்டை அறிய முடியும். உணர்வு உலகத்தில் செல்லும்பொழுது முரண்பாட்டிற்கு அங்கு இடமேயில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பரம்பொருளை உண்மை என்று கூறுவதோ, இன்மை என்று கூறுவதோ இயலாத காரியம். உணர்வினால் உணர முற்படும்போது அந்தப் பொருள் எங்கும் நிறைந்திருக்கின்றது. உணர்பவர்களின் உள்ளே நின்று உணரப்படு பொருளாய் அது அமைந்துவிடுகிறது. எனவே அது உள்பொருளாய், உண்மையாய் விளங்கக் காண்கிறோம். அதே கடவுட் பொருளை அறிவின் துணைகொண்டு ஆராயத் தொடங்கினால், வெங்கா யத்தைத் தோலுரித்துக்கொண்டே சென்றால், இறுதியில் ஒன்றும் மிஞ்சாததுபோல இந்த ஆய்வாலும் கடவுள் என்ற ஒரு பொருள் இல்லை என்ற முடிவிற்கு வர நேரிடும். வேத காலத்திலேயேகூட இப்படி ஆராயும் கூட்டமொன்று இருந்தது என்பதை அறியமுடிகிறது. எனவே, இன்மையுமாய் உள்ளவனும் அவனே என்ற கருத்துப்பட அடிகளார். பேசுகின்றார்.

‘கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி’ என்பது அடுத்துநிற்கும் தொடராகும். பொம்மலாட்டத்தில் பொம்மைகள் கை, கால், தலை முதலியவற்றை ஆட்டி, பேசுவதுபோலும் இயங்குகின்றன. குழந்தைகள் அதனைப் பார்க்கும்பொழுது திரைக்குப்பின் ஒருவன் இருந்து இவற்றை இயக்குகிறான் என்பது தெரியாமல், பொம்மைகளே இவற்றைச் செய்கின்றன என்று நினைக்கின்றன. அதேபோல வளர்ந்து